வேதாரண்யம் அருகே தந்தை சரமாரி குத்திக்கொலை-மகன் வெறிச்செயல்

வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே சொத்தை பிரித்து கொடுக்காத தந்தையை குத்திக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி வடக்கு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (96). இவருக்கு சந்திரசேகரன் (58), ரவி (55), சோழன் (50) என்ற 3 மகன்கள். அனைவரும் கூலி தொழிலாளர்கள். 4 மகள்கள். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் மகன் சந்திரசேகரன் வீட்டருகே கோவிந்தசாமி வசித்து வருகிறார். இந்த நிலையில் கோவிந்தசாமிக்கு அப்பகுதியில் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இதனை பிரித்து கொடுக்குமாறு மகன் சந்திரசேகரன் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் தந்தை, மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சொத்தை பிரித்து கொடுக்காததால் சந்திரசேகரன் மூன்று முறை விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் சொத்தை பிரித்து கொடுக்கும்படி தந்தையிடம் சந்திரசேகரன் கேட்டபோது, தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரத்தில் சந்திரசேகரன், தந்தை கோவிந்தசாமியை வீட்டு வாசலில் கத்தியால் சரமாரி குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலே சரிந்து விழுந்து இறந்தார்.தகவல் அறிந்த வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல், இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தசாமி உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சந்திரசேகரனை கைது செய்தனர்.

சந்திரசேகரன் கடந்த 22 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பாதித்து அனுப்பும் பணத்தில் அதிக சொத்துக்கள் வாங்கிய கோவிந்தசாமி, மகள்களின் திருமணத்திற்கு ஒருசில சொத்துக்களை விற்று திருமணம் செய்து கொடுத்துள்ளார். குடும்பத்திற்காக உழைத்த சந்திரசேகரன், கடும் நெருக்கடியில் இருந்தபோது, தந்தையிடம் சொத்தை பிரித்து கேட்டுள்ளார். இதற்கு தந்தை மறுப்பு தெரிவித்ததால் இந்த விபரீத சம்பவம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: