×

சீர்காழி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பிரசவம் குழந்தை இறந்ததால் உறவினர்கள் போராட்டம்

சீர்காழி : சீர்காழி அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததால், டாக்டர் இன்றி மருத்துவம் பார்த்ததாக கூறி உறவினர்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புளியந்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் பாண்டியன்-ரம்யா தம்பதி. விவசாய கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

2வது முறையாக கர்ப்பமான ரம்யாவிற்கு, பிரசவவலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 3 மணி அளவில் ரம்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி தாயையும், சேயையும் மருத்துவமனை செவிலியர்கள் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், குழந்தை இறந்து விட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், டாக்டர்கள் இன்றி காலதாமதமாக செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாக கூறி இறந்த குழந்தையை கையில் ஏந்தி குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேற்றுமுன்தினம் இரவு சீர்காழி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த சீர்காழி டிஎஸ்பி லாமேக், இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பானுமதி ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது, உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து இறந்த குழந்தையை பெற்றோர் வீட்டிற்கு எடுத்து சென்றனர்.

Tags : Sirkazhi ,government hospital , Sirkazhi: After the death of a baby born in a government hospital near Sirkazhi, the relatives protested alleging that he was treated without a doctor.
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்