மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டு பழமையான தவ்வை சிற்பம் கண்டெடுப்பு-முற்கால பாண்டியர்கள் காலத்தை சேர்ந்தது

மானாமதுரை : மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான தவ்வை எனும் மூதேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது அழகிய நாயகி அம்மன் கோயிலின் வளாகத்தில் தவ்வை சிற்பம் உட்பட முற்கால பாண்டியர்களின் ஆறு சிற்பங்கள் கண்டறியப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது :

கட்டிக்குளம் கிராமத்தில் இதற்கு முன்பு முற்கால பாண்டியர் கால ஒரு வைஷ்ணவி சிற்பமும், விநாயகர் சிற்பமும் கண்டறியப்பட்டிருந்தது. தற்போது தவ்வை, சுகாசனமூர்த்தி, பெருமாள், பிராமி, மகேஸ்வரி, இந்திராணி போன்ற முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த மேலும் 6 சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதை பார்க்கும்போது இவ்வூரில் மிகப்பெரிய சிவன் கோயில் இருந்திருக்க வேண்டும். இதில் தவ்வை என்ற சிற்பம் சிறப்பு வாய்ந்தது. இதனை மூதேவி, மூத்ததேவி, தவ்வை, தூமாவதி, சேட்டைதேவி, முகடி, காக்கைகொடியாள், மாமுகடி போன்ற பல பெயர்களில் குறிப்பிடுவர்.

மூத்ததேவி என்ற சொல்லே மூதேவி என்று மருவியுள்ளது. மேலும் மூதேவி, தேவிக்கு முன் தோன்றியவள். இதனாலேயே மூத்ததேவி என்று அழைக்கப்பட்டாள். ஆனால் காலப்போக்கில் மூதேவி என்பவள் அவலட்சுமி என்றும் துர்தேவதை என்றும் தவறாக புரிந்து கொண்டு, துரதிருஷ்டத்திற்கு அதிபதி என்று பொருள் கொள்ள வைத்துவிட்டனர். தென்னிந்தியாவில் மூத்ததேவி வழிபாடு பரவலாக இருந்து வந்துள்ளது என்பதை தற்போது கண்டறியப்பட்ட சிற்பம் மூலம் அறியலாம். இந்த சிற்பம் இரண்டரை அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் நடுவில் மூத்த தேவியும், வலது பக்கம் மகன் மாந்தனும், இடது பக்கம் மகள் மாந்தியும் இடம் பெற்றிருக்கின்றனர்.

இந்த சிற்பங்கள் மூன்றும் ஒரே பலகைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த மூத்ததேவி சிற்பம் பல்லவர் காலம் முதல் வழிபாட்டில் குழந்தை செல்வம் தருபவளாகவும், விவசாயத்திற்கு முன் வழிபடக்கூடிய மாரி (மழை) தெய்வமாகவும் பார்க்கப்பட்டார். இந்த 6 சிற்பங்களும் கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அழகிய நாயகி அம்மன் கோயிலில் தற்போதும் வழிபாட்டில் இருந்து வருகிறது. இந்த சிற்பங்கள் அனைத்தும் முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது.இவ்வாறு கூறினர்.

Related Stories: