×

நீர்திறப்பு அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்க முடிவு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

காஞ்சிபுரம்: நீர்திறப்பு அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து காலை 9 மணி முதல் விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரியில் இருந்து கடந்த காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக  தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

22 அடியில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 24 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 22 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விநாடிக்கு 100 கனஅடி மட்டும் திறக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரிக்கு மழை காரணமாக விநாடிக்கு  ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து வந்துக் கொண்டிருக்கிறது.

ஏரியில் 3,645 மில்லியன் கனஅடி நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து கனமழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் அடையாறு கரையோர பகுதி மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இதேபோல் பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கடைசி தடுப்பணையும் நிரம்பியது. சீமாவரம் தடுப்பணை நிரம்பி சுமார் 3 அடி உயரத்துக்கு உபரிநீர் வழிந்தோடுகிறது. பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறப்பால் சீமாவரம் தடுப்பணையில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. நேற்று வரை தண்ணீரின்றி வறண்டு கிடந்த தடுப்பணை நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Cemperambakkam Lake , Opening, Chembarambakkam Lake, 1,000 cubic feet of water
× RELATED செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1300 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு