×

மாண்டஸ் புயல் தாக்கத்தால் ரூ.700 கோடி அளவுக்கு சென்னையில் சேதம்: முதல்கட்ட ஆய்வில் தகவல், சேத மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: மாண்டஸ் புயல் தாக்கத்தால் கடந்த 2 நாட்களில் மட்டும்  மரங்கள் மற்றும் மரக்கிளைகள் என 644 மெட்ரிக் டன் அளவு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், முதல் கட்ட மதிப்பீட்டில் மாண்டஸ் புயல் காரணமாக சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது கணக்கிடப்பட்டுள்ளது. அரசிடம் சமர்ப்பிக்கப்படும் இறுதி அறிக்கையில்தான் அதன் உண்மையான மதிப்பு தெரியும். மாண்டஸ் புயல் தாக்கத்தால் சென்னையில் பல இடங்களில் 400 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது. 200 க்கும் மேற்பட்ட பெரிய மரக்கிளைகள் விழுந்தன. இவற்றை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகல் பராமல் முழுவதுமாக அகற்றியுள்ளனர்.  

இதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 272 மர அறுவை இயந்திரங்களை பயன்படுத்தினர். மேலும், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை இயந்திரங்கள், ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள், ஒரு பகுதிக்கு ஒரு பொக்லைன் என 45 பொக்லைன்  வாகனங்கள், 115 டிப்பர் லாரிகள் இப்பணிக்கு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும்  மரங்கள் மற்றும் மரக்கிளைகள் என 644 மெட்ரிக் டன் அளவு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.  

அதே போல் கடந்த 2 நாட்களாக சென்னை பட்டினப்பாக்கம் சாலையில் புயலின் தாக்கத்தால் சாலை முழுவதும் பாலைவனம் போன்று காணப்பட்டது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது,  அந்த பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம்  மணல் அப்புறப்படுத்தப்பட்டு நேற்று முதல் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. அதே போல் மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களை கடந்த 2 நாட்களாக பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அனுமதி வழங்கப்பட்டது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில்: புயலால் பல இடங்களில் மரங்கள் விழுந்தது. அதனை அகற்றி வருகிறோம். பல இடங்களில் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளில் உடனடி சீரமைப்பு பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சேதம் மதிப்பாக 700 கோடி ரூபாய் முதற்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு பின், மொத்த சேத மதிப்பு கணக்கிடப்பட்டு, அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.  சில இடங்களில் கணக்கில் வராமல் இருக்கலாம். அவற்றை கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது” என்றார்.


Tags : Chennai ,Storm , Cyclone Mandus damage in Chennai to the tune of Rs 700 crore: Preliminary survey data, damage value likely to increase further
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...