×

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்

சென்னை: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணியாறு நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மாண்டஸ் புயல் மழை காரணமாக உயர்ந்து வருகிறது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழையால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது. இந்த ஏரியின் கொள்ளளவு   281 மில்லியன்  கன அடியாகும். 280 மில்லியன் கன அடி வரை நீர் இருப்பு இருந்தால் மட்டுமே  ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும். ஆனால், தொடர் மழை காரணமாக, தற்போது 277 மில்லியன் கன அடி நீர்  இருப்பு உள்ள நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு வினாடிக்கு 500 கனஅடி  வீதம் உபரி நீரை, திருப்பதி சப்-கலெக்டர் பாலாஜி மற்றும் ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகள் வெளியேற்றினர்.

இவ்வாறு திறக்கப்பட்ட உபரி நீரானது ஆந்திர மாநில எல்லையான சுருட்டப்பள்ளி அணைக்கட்டுக்கு கீழ் உள்ள ஆரணியாற்றின் தமிழ்நாட்டின் எல்லையான ஊத்துக்கோட்டை வழியாக செல்லக்கூடும் என்பதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி ஊத்துக்கோட்டை கிராமத்தின் இடது புறம் உள்ள கிராமங்களான ஊத்துக்கோட்டை, தாராட்சி, கீழ்சிட்ரபாக்கம், மேல்சிட்ரபாக்கம், பேரண்டூர், 43 பனப்பாக்கம், பாலவாக்கம், லட்சிவாக்கம், சூளைமேனி, காக்கவாக்கம், சென்னாங்காரணை, ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், பாலேஸ்வரம், நெல்வாய், மங்களம், பாலவாக்கம், ஆர்.என்.கண்டிகை, ஏ.என்.குப்பம், மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, அரியந்துறை, கவரப்பேட்டை, பெருவாயல், ஏலியம்பேடு, பெரியகாவனம், சின்னகாவனம், பொன்னேரி, தேவனஞ்சேரி, லட்சுமிபுரம், லிங்கப்பையன்பேட்டை, கம்மவார்பாளையம், பெரும்பேடு, வஞ்சிவாக்கம், திருவெள்ளவாயல், ஒன்பாக்கம், பிரளயம்பாக்கம், போளாச்சி அம்மன் குளம் ஆகிய கிராம மக்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

அதேபோல் ஊத்துக்கோட்டைக்கு வலதுபுற கிராமங்களான போந்தவாக்கம், அனந்தேரி, பேரிட்டிவாக்கம், வடதில்லை, மாம்பாக்கம், கல்கட்டு, மாளந்தூர், தொளவேடு, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைப்பட்டு, பெரியபாளையம், ராள்ளப்பாடி, ஆரணி, போந்தவாக்கம், புதுவாயல், துரைநல்லூர், வைரவன்குப்பம், வெள்ளோடை,பொன்னேரி, ஆலாடு, கொளத்தூர், குமார சிறுலப்பாக்கம், மனோபுரம், அத்திமாஞ்சேரி, வேலூர், ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சிகாட்டூர், கடப்பாக்கம், சிறுப்பழவேற்காடு, ஆண்டார்மடம், தாங்கல்பெரும்புலம், ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்குக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த உபரிநீர் நேற்று முன்தினம் இரவு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டைக்கு வந்தது.  இந்நிலையில்  நேற்று பிற்பகல் 12 மணிக்கு பிச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பது திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது ஏரிக்கு 1500 கன அடி வீதம் மலைப்பகுதிகளில் இருந்து மழைநீர் ஏரிக்கு வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Pichatur lake ,Andhra , Stop release of excess water from Pichatur lake in Andhra state
× RELATED நில உரிமை சட்டம் குறித்து தவறான...