×

கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் ஐயப்ப சுவாமிக்கு திருவிளக்கு பூஜை; 14ம் தேதி நடக்கிறது

சென்னை: கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் வரும் 14ம் தேதி ஐயப்ப சுவாமிக்கு திருவிளக்கு பூஜை  நடைபெறுவதுடன், 40 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலை யாத்திரை சென்ற பக்தர்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சிறப்பு செய்ய உள்ளார், என அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் ஐயப்ப சுவாமிக்கு கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து, இருமுடி கட்டி, ஐயப்ப பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் திருக்கோயில்கள் சார்பாக திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை, சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பாக, சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பசுமை வழிச்சாலையில் உள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், வரும் 14ம் தேதி மாலை 4 மணிக்கு, ஐயப்ப சுவாமிக்கு திருவிளக்கு பூஜை சிறப்பு விழாவாக நடைபெற உள்ளது. இதில், ஐயப்பன் வரலாற்றை சித்தரிக்கும் நாடகத்தை வைஷ்ணவி குழுவினரும், ஐயப்பனை போற்றி பாடும் பஜனையை வீரமணி குழுவினரும் நடத்த உள்ளனர். தொடர்ந்து சொல்வேந்தர் சுகி சிவம் மற்றும் கலைமாமணி தேசமங்கையர்க்கரசி ஆன்மிக சொற்பொழிவுகளுடன் பஞ்சவாத்திய முழக்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, கடந்த 40 ஆண்டுகளாக விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்ட பக்தர்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கவுரவித்து சிறப்பு செய்ய உள்ளார்.

விழாவில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதன் மோகன், மாநகராட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவிற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு பிரசாதம் மற்றும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thiruvilakku ,Ayyappa Swami ,Kapaleeswarar Karpakampal Marriage Hall , Thiruvilakku Pooja to Ayyappa Swami at Kapaleeswarar Karpakampal Marriage Hall; Happening on 14th
× RELATED குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு