×

காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தீபாவளி சிட்பண்ட் நடத்தி ரூ.16.23 கோடி மோசடி; செய்யாறில் 2வது நாளாக போராட்டம்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் செயல்பட்ட சிட்பண்ட் நிறுவனத்தில், செய்யாறு, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் பல லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளனர். ஆனால், கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையின்போது பொருட்கள் விநியோகிக்காததால், பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வாட்ஸ்அப் பதிவு மூலம் உத்தரவாதம் அளித்தார். மேலும், நிறுவனம் சார்பில் பாண்டு பத்திரம் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கான காலக்கெடு டிசம்பர் 10ம் தேதி என குறிப்பிட்டு இருந்தார்களாம்.

எனவே, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வந்தவாசி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட முகவர்கள் நேற்று முன்தினம், செய்யாறு நகரில் பாவாடை மூர்த்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள தீபாவளி பண்டு சீட்டு நடத்திய நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில பெண் முகவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் நேரில் வரவேண்டும் எனக்கூறி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 48 முகவர்கள் புகார் அளித்தனர். அதன்படி, ரூ.9.89 கோடி மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று மதியம் சிட்பண்டு நிறுவனத்தின் முகவர்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்தவாசி சாலையில் ஞானமுருகன்பூண்டி பகுதியில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். மேலும், சிட்பண்டில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் வந்து புகார் கொடுங்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மாலை 66 முகவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, ரூ.6.33 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. சிட்பண்ட் நிறுவனம் ரூ.16.23 கோடி மோசடி செய்துள்ளதாக கடந்த 2 நாட்களில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Tags : Diwali ,Chitband ,Kanchipuram ,Vellore ,Seyyar , 16.23 crore fraud by conducting Diwali Chitband in districts including Kanchipuram and Vellore; Protest in Seyyar for 2nd day
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...