×

உலக கோப்பை கால்பந்து; உள்ளே நடப்பு சாம்பியன் வெளியே யுரோ சாம்பியன்

தோஹா: அல் பயத் அரங்கில் நேற்று   நடந்த கடைசி காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து(5வது ரேஙக்), பிரான்ஸ்(4வது ரேங்க்) அணிகள் மோதின.
தரவரிசையில்  அடுத்தடுத்த இடங்களில் உள்ள முன்னணி அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கூடவே ஐரோப்பிய(யுரோ) கோப்பையை வென்ற நடப்பு  சாம்பியன் இங்கிலாந்தும்,  உலக கோப்பை கையில் வைத்திருக்கும் நடப்பு சாம்பியன் பிரான்சும் களம் கண்ட ஆட்டம் என்பதால்   கூடுதல் பரபரப்பு அரங்கில் மட்டுமின்றி கால்பந்து உலகம் முழுவதும் நிலவியது அதற்கேற்ப இருஅணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில்  ஆட்டத்தில் வேகம் காட்டின.  ஹாரி கேன் தலைமையிலான  இங்கிலாந்து  கோலடிக்கும் முயற்சியிலும் அடிக்கடி  ஈடுபட்டது.

கோல்கீப்பர் ஹயூகோ லூரிஸ் தலைமையிலான பிரான்ஸ் வீரர்களும் அதற்கு பதிலடி கொடுத்த வண்ணம் இருந்தனர். அதன் பலனாக ஆட்டத்தின் 17வது நிமிடத்தில்  சகவீரர் கிரிஸ்மான் தட்டி தந்த பந்தை  வாங்கிய அயுரேலியன், கோல் பகுதிக்கு வெளியில் இருந்தே அற்புதமாக கோல் அடித்தார். அதனால்  பிரான்ஸ்  அணி 1-0 என்ற கணக்கில்  முன்னிலைப் பெற்றது. இங்கிலாந்து வீரர்கள் கூடுதல்வேகம் பெற்று கோலடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவற்றை  பிரான்ஸ் கோல்கீப்பர் ஹியூகோ சாமர்த்தியமாக  தடுத்துக் கொண்டே இருந்தார். அதனால் முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது.

தொடரந்து 2வது பாதியின் 58வது நிமிடத்தில்  பிரான்ஸ் வீரர் அயுரேலியன் முரட்டு ஆட்டத்தால் இங்கிலாந்து வீரர் புகயோ சாகா கீழே விழுந்தார். அதனால் இங்கிலாந்து அணிக்கு ‘பெனால்டி கிக்’ வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்திய ஹாரி அழகான கோலாக மாற்றினார். அதனால்  ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது. தொடர்ந்து முட்டல், மோதல் தொடர்ந்த நிலையில் ஆட்டத்தில் 78வது நிமிடத்தில் கிரிஸ்மான் கோல் பகுதியை நோக்கி அடித்த பந்தை  ஒலிவியர் தலையில் முட்டி  கோலாக்கி அசத்தினார். எனவே பிரான்ஸ் 2-1 என்ற  கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வர இங்கிலாந்து வீரர்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பிரான்ஸ் வீரர்  தியோ ஹெரன்டெஸ்  தங்கள் கோல் பகுதியில் கோலடிக்க வந்த இங்கிலாந்து வீரர் ஜூடு பெல்லிங்காமை வேண்டுமென்ற தள்ளி விட்டார்.

அதனால்  மறு ஆய்வுக்கு பிறகு இங்கிலாந்துக்கு 81வது நிமிடத்தில் ‘பெனால்டி கிக்’ வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் கோலாக்க நினைத்த ஹாரியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. நல்ல வாய்ப்பை நழுவ விட்டதால் அரங்கில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் சோகத்தில் வீழ்ந்தனர். அந்த சோகத்தில் இருந்து ரசிகர்களை  மீட்க இங்கிலாந்து வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே ஆட்டம் முடிவுக்கு வர பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. நடப்பு சாம்பியனை விட எல்லா வகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுரோ சாம்பியன் இங்கிலாந்து 56 ஆண்டுகால கோப்பைக் கனவு  கானல் நீரான வேதனையில் வெளியேறியது.

Tags : World Cup ,Euro , World Cup Soccer; The reigning champion inside is the Euro champion outside
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...