×

தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் மாண்டஸ் புயலால் விழுந்த மரங்கள் உடனடி அகற்றம்: எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கு பாராட்டு

தாம்பரம்: மாண்டஸ் புயலால் தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் சாலைகளில் விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டு, மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். வங்க கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் குறிப்பாக தாம்பரம் பகுதியில் அதிகபட்சமாக 133.5 மிமீமழை பதிவானது. புயல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 140 இடங்களில் மரங்கள் விழுந்தன. இதுகுறித்து 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்து மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.  தாம்பரம் மாநகராட்சி வெள்ள தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஜான்லூயிஸ், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் தலைமையில் ஊழியர்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் சுரங்கப்பாதை மற்றும் சாலைகளில் தேங்கிய மழை நீரை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்பிறகு போக்குவரத்து வழக்கம்போல் தொடங்கியது. பல மணி நேரம்  மின்சாரம் தடை செய்யப்பட்டதால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.  இதையடுத்து டீசல் இஞ்ஜின் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது.

மின் கம்பம் மீது மரம் முறிந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மாமன்ற உறுப்பினர் ஜோதிகுமார் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தி மின் கம்பத்தை சரிசெய்து மின் இணைப்பு கொடுத்தனர். இதுபோல் தாம்பரம் மாநகராட்சி 65வது வார்டு கே.வி.என் பிரதான சாலையில் மழைநீருடன் அடித்து வரப்பட்ட செடிகள் சாலை முழுவதும் சூழ்ந்தது. மாமன்ற உறுப்பினர் சேலையூர் சங்கர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கால்வாய் பணி முடிக்கப்படாமல் இருப்பதே மழைநீர் தேங்கி நிற்பதற்கு காரணம் என பகுதி மக்கள் கூறினர்.

தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்திருந்தது. உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். மழைநீர் சூழ்ந்த வார்டுகளில் இருந்த நோயாளிகள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தரைதளம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்தது.  வெள்ள பாதிப்புக்கு முன்பே தரைதளத்தில் உள்ள நோயாளிகள் மேல் தளத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீர் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டது.

தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் புயல் மற்றும் மழை பாதிப்புகளை  தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், இ.ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் தனித்தனியாக ஆய்வு செய்து,  மழைநீர் மற்றும் முறிந்து விழுந்த மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் எம்எல்ஏக்கள், மேயர் மற்றும் அதிகாரிகளை பாராட்டினர்.

Tags : TAMBARI ,Pallavaram , Kudos to Tambaram, Pallavaram Region, Mandus Puyal, MLAs, Officials`
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை