×

புயல் காற்றிலும் காட்சியளித்த மகாதீபம் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீபத்திருவிழா நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விமரிசையாக நடந்த கார்த்திகை தீபத்திருவிழா, நேற்று இரவு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 6ம் தேதி மகாதீபம் ஏற்றப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தீபத்திருவிழாவை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், வரலாறு காணாத வகையில் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில், தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற தீபத்திருவிழா உற்வசத்தின் தொடக்கமாக, 3 நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடும், விழாவின் நிறைவாக 3 நாட்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 6ம் தேதி முதல் 10ம் தேதி தேதி வரை ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்து முடிந்தது. தீபத்திருவிழாவின் நிறைவாக நேற்று இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது.

அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. நேற்று இரவு 9 மணியளவில், பஞ்சமூர்த்திகளில் ஒருவரான சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும், கடந்த 6ம் தேதி மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம், தொடர்ந்து 5வது நாளாக நேற்று காட்சியளித்தது. மாண்டஸ் புயல் காரணமாக மலை மீது பலத்த காற்று வீசியது. புயல் காற்றிலும் தொடர்ந்து மகாதீபம் காட்சியளித்தது. மலை மீது மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிக்கும். எனவே, வரும் 16ம் தேதி வரை மலைமீது மகாதீபத்தை தரிசிக்கலாம்.

Tags : Mahadeepam Chandikeswarar Utsavam ,Deepatri festival , Diwali ends with Mahadeepam Chandikeswarar Utsavam, which was displayed in stormy winds
× RELATED ஐயங்குளத்தில் அலங்கார ரூபத்தில்...