தற்காலிக முகாம்களில் காஞ்சி கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: மாண்டஸ் புயலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் டி.என்.ஹரிஹரன் மற்றும் கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். முன்னதாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாவட்ட பேரிடர் அவசரகால கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்ட பணி, வரப்பெற்ற புகார் விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் குறித்து கேட்டறிந்தனர். செவிலிமேடு பகுதியில் 42 பேர், கீழம்பியில் 28 பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 46 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 1,565 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, காஞ்சிபுரம் வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: