×

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் சோகம்; மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாப உயிரிழப்பு : மடிப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூரில் சோகம்; உறவினர்கள் கதறல்

ஆலந்தூர்: மடிப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் 7வது தெருவில் உள்ள குடிசை வீட்டில் வசித்தவர் லட்சுமி (45). சித்தாள் வேலை செய்து வந்தார். இவருடன், மகள்களான ஆர்த்தி, அபிநயா மற்றும் அண்ணன்  மகனான ராஜேந்திரன் ஆகியோரும் வசிக்கின்றனர். புயல் காற்று, மழை காரணமாக இவர்கள் அனைவரும் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு தூங்குவதற்காக சென்றனர்.

அங்கு, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அருண்பிரசாத் என்பவருடன் இரவு 11.30 வரை பேசி கொண்டிருந்தனர். தூக்கம் வருவதாக கூறி விட்டு சிறிது நேரத்தில் ராஜேந்திரன் சென்று விட்டார். சிறிது நேரத்தில் பயங்கர அலறல் சத்தம் கேட்டது. தூக்கத்தில் இருந்த அருண்பிரசாத் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பலர் கீழே இறங்கி ஓடி வந்தனர். லட்சுமியும் ராஜேந்திரனும் மயங்கி நிலையில் கிடந்தனர். அவர்களது அருகில் மின்சார கம்பி அறுந்து கிடந்தது. அதனால் மின்சாரம் தாக்கியுள்ளது என அறிந்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனே மின்வாரிய அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்தனர். சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் எஸ்ஐ ராஜேந்திரன், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பரிசோதனையில் இருவரும் இறந்து விட்டது தெரியவந்தது. அவர்களது மகள்கள் கதறி அழுதனர். இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுதன் குமார் (22), நிரஞ்சன் குமார் (24). இவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள சிப்காட்டில் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். இன்று காலையில் பணி முடிந்ததும் வீட்டிற்கு பிள்ளைபாக்கம் நோக்கி நடந்து சென்றனர். மாண்டஸ் புயல் காரணமாக இப்பகுதியில் வீசிய பலத்த காற்றியது. அப்போது, திடீரென சாலையோர மரம் வேரோடு மின் கம்பிகள் மீது விழுந்து கிடந்தது. அவ்வழியாக நடந்து சென்ற சுதன் குமார், நிரஞ்சன் குமார் மீது மின் ஒயர்கள் அறுந்து விழுந்தது.

இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின்சாரத்தை துண்டித்து இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sriperudur , Tragedy of stepping on a downed power line; 4 killed in electrocution : Tragedy in Madipakkam, Sriperumbudur; Relatives scream
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டை உடைத்து நகை பணம் திருடியவர் கைது