×

மாண்டஸ் புயலால் சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை: மாண்டஸ் புயலின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு காலை முதல் ஆய்வு செய்தார். சென்னை காமராஜர் அரங்கம் எதிரே பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து விட்டது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் அம்மரத்தினை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மேல்கூரையில் கண்ணாடிகள் உடைந்து விட்டது. அக்கண்ணாடிகளை அகற்றி, புதியதாக கண்ணாடிகள் பொருத்த ஆணையிட்டார்கள். அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல், அப்பகுதிகளுக்குள் நோயாளிகள் செல்லாத வகையில் உடனடியாக தடுப்பு (Net) அமைக்கவும் உத்தரவிட்டார்கள், உடனே தடுப்பு அமைக்கப்பட்டது.

சென்னை முத்துசாமி பாலம் சிக்னல் அருகில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. அப்பணியினை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்கள். கொளத்தூர் வீனஸ் நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதா என்பதையும், டெம்பிள் ஸ்கூல் அருகில் மழைநீர் கால்வாயில் தண்ணீர் தேங்காமல் ஓடுகிறதா என்பதையும் ஆய்வு செய்து சீராக உள்ளது என்பதை உறுதி செய்தார்கள். ரெட்டேரி ஜங்ஷன் அருகே மழைநீர் கால்வாயில் மழைநீர் தேங்காமல் அடைப்பு ஏற்படாத வண்ணம் வேகமாக ஓடுகிறதா என்பதையும், கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் மழைநீர் ஏதும் தேங்கியுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.

இங்கு எவ்வித தண்ணீரும் தேங்கவில்லை என்பதை அமைச்சர் உறுதி செய்தார். இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், கோட்டப் பொறியாளர் ரவி, கண்காணிப்புப் பொறியாளர் செந்தில் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Minister ,Chennai , Minister A. V. Velu's study on the effects of Cyclone Mandus in Chennai
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்