×

திருச்சி மாநகரை அழகுப்படுத்தும் திட்டப்பணி ‘விறுவிறு’ அனுமதி இல்லாத இடங்களில் போஸ்டர் ஒட்டினால் அபராதம்

*ஜனவரி மாதம் முதல் அமல்

*மீறினால் அபராதம் வசூல்

திருச்சி : திருச்சி மாநகராட்சி மொத்தம் 167.23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இதில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மன்ற பொறுப்பாளர்கள், அதிகாரிகள் மூலம் அரசின் பல்வேறு திட்டங்களை அரசு நிதி பெற்று நிறைவேற்றி வருகின்றனர்.கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்த ஒரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மக்களுக்கான எவ்வித அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை.

காரணம் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருந்ததால் மக்களுக்கான பிரதிநிதிகள் மூலம் அடிப்படை தேவை அறிந்து நிறைவேற்றப்படவில்லை. இதில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அமைப்புகளில் வெற்றி பெற்று மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டு அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

மாநகராட்சியி்ல் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படு்ம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பொதுமக்களுக்கான பணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், ரங்கத்தில் புதிய பஸ் நிலையம், எ.புதூரில் பெண்களுக்கான உயர்நிலைப்பள்ளி, புதிய ஆரம்ப சுகாதார மையங்கள், நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக கருத்தடை சிகிச்சை மையம், மாநகரை அழகுப்படுத்தும் விதமாக சுவரொட்டி (போஸ்டர்கள்) ஒட்டுவதற்கு தனி இடம், மேம்பாலத்தூண்கள் அழகுப்படுத்துதல், அனைத்து பகுதிகளிலும் புதிய தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மக்களுக்கான நலப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மேலும், மாநகரில் வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ள வரி இனங்களை கண்டறிந்து வசூலிப்பதில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி விரைந்து வசூலித்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறுகையில், திருச்சி மாநகராட்சியில் ரூ.100 கோடி அளவில் வரி இனங்கள் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து வசூலிக்க நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்களின் நிலுவைகள் வசூலிப்பது குறித்து கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட அதிகாரிகளிடையே ஆய்வு கூட்டத்தில் சிறப்பு முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி தினமும் ரூ.1.25 கோடி அளவில் நிலுவையில் உள்ள வரி இனங்களை வசூலிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தற்போது தினமும் ரூ.75 முதல் 80 லட்சம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை சுமார் 51 சதவீதம் நிலுவையில் உள்ள வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அதனை விரைவுப்படுத்தி வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இந்த டிசம்பர் மாதத்திற்குள் 80 சதவீதம் வரி இனங்கள் வசூலிக்கப்படும்.

நிலுவையில் உள்ள வரி இனங்களை வசூலிப்பதில் திருச்சி மாநகராட்சி சிறந்து விளங்குகிறது. அதுபோல் திருச்சி மாநகரை அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் அரசு கட்டடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள சுவர்களில் திருமண விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் குறித்து போஸ்டர் ஒட்டுவது கட்டு்பபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான மாநகரில் 14 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு பதாகைகள் நிறுவப்பட்டுள்ளது.

இதுகுறித்து லித்தோஸ் உரிமையாளர்கள் மற்றும் போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஒதுக்கிய இடத்தில் போஸ்டர் ஒட்டாமல் சுவரில் ஒட்டினால் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். அதுபோல் மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையை பயன்படுத்தாமல் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதனிடம் கலந்து ஆலோசித்து வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அபராத வசூல் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Trichy: Trichy has a total area of 167.23 square kilometers. It is chosen by the people knowing the needs of the public
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...