×

மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரை 43 ஆயிரம் ஏக்கரில் இரண்டாம் போக நெல் நடவு நிறைவு

*மழை காலங்களில் நெற்பயிரை பாதுகாக்க வேளாண்துறை டிப்ஸ்

மதுரை : மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரை இருபோக சாகுபடி பாசன பகுதியில் 43 ஆயிரம் ஏக்கரில் இரண்டாம் போகத்திற்கான நெல் நடவு பணி முடிவடைந்தது. மழை காலங்களில் நெற்பயிர்களை பாதுகாக்க வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.மதுரை மாவட்டத்திற்கு முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதுதவிர குண்டாறு, சாத்தையாறு அணைகள் மூலமும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதில் பிரதானமாக இருப்பது பெரியாறு பாசன ஆயக்கட்டாகும். ஆண்டுக்கு இருபோகம் நெல் விளையும் 43 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ளது. மேலும், கள்ளந்திரி முதல் மேலூர் வரை ஒருபோக பாசன ஆயக்கட்டு மட்டும் 85 ஆயிரம் ஏக்கர் உள்ளன. மேலும், திருமங்கலம் பிரதான கால்வாய் பாசனத்தில் 15 ஆயிரம் ஏக்கர், நிலையூர் கால்வாய் பாசனத்தில் 10 ஆயிரம் ஏக்கர் ஆகியவை உள்ளன. இத்துடன் மாவட்டத்தில் 380 பாசனக் கண்மாய்கள் உள்ளன. இதில், பெரியாறு, வைகை பாசனப் பகுதியில் மட்டும் 210 கண்மாய்கள் உள்ளன.

பேரணை முதல் கள்ளந்திரி வரை...

மாவட்டத்தில், பேரணை முதல் கள்ளந்திரி வரையில் உள்ள 43 ஆயிரம் ஏக்கரில், முதல் போக சாகுபடி முடிவடைந்து. கடந்த நவம்பரில் இருந்து இரண்டாம் போகத்திற்கான நெல் பயிரிடும் பணி தீவிரமாக நடந்தது. மார்கழி மாதத்திற்குள் நடவு பணியை முடித்தால்தான், மாசி மாதத்திற்குள் கதிர் அறுவடை செய்ய முடியும். இதனால், விவசாயிகள் தீவிரமாக நடவு பணியில் ஈடுபட்டனர். இதனால், வரும் 15ம் தேதிக்குள் இப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

ஆண்டுதோறும், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 730 ஏக்கரில் (59 ஆயிரம் ஹெக்டேர்) நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லை, அவர்கள் விளைநில பகுதிக்கு, சென்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 150க்கு மேற்பட்ட இடங்களில் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டு, விவசாயிகள் சாகுபடி செய்த நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஏற்கனவே கள்ளந்திரி முதல் பேரணை பகுதியில் ஒரு போக பாசன பகுதியான 85 ஆயிரம் ஏக்கருக்கு கடந்த செப்டம்பரில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நெல்விளைச்சல் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஜனவரியில்) இந்த வயல்களில் நெல் அறுவடை துவங்கும். அதேபோல், திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன பகுதியிலும், தற்போது கதிர் அறுவடைக்கு தயாராகி வருகிறது. நிலையூர் பாசன பகுதியில், தற்போதுதான் நடவு முடிந்துள்ளன.

இந்த பகுதியில் நெல் அறுவடை ஜனவரி கடைசியில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால், நெல் பரிச்சல் ஏற்பட்டு, பூ பூத்த பயிர்களில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், நெல் வயலில் அதிக தண்ணீர் தேங்கி வடிகால் வசதி இன்றி பயிர் பாதிப்பு ஏற்படும். இக்காலத்தில் பயிர் பாதுகாப்பு குறித்த வழிமுறைகளையும் வேளாண்மை அலுவலர்கள் விவசாயிகளுக்கு வலியுறுத்தி, கண்காணித்து வருகின்றனர்.

59 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி:

மதுரை மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுதோறும். 59 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 143 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நிறுவப்பட்டது. அதன் மூலம், ஒரு லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தாண்டும் நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வயல்களில் அதிக தண்ணீர் தேங்கினால் பயிருக்கு பாதிப்பு

மழைகாலத்தில் நெற்பயிர்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பது குறித்து வேளாண் துணை இயக்குநர் லட்சுமி பிரபா கூறியதாவது: தற்போது பெய்து வரும் மழையினால் நெல் வயலில் அதிக தண்ணீர் தேங்கி வடிகால் வசதி இன்றி பயிர் பாதிக்கப்படுகிறது. இதனால், நீர் வயல்களில் ேதங்கி பயிர்களில் சத்துப்பற்றாக்குறை எற்பட்டு வளர்ச்சி பாதித்து மகசூல் இழப்பும் அதிகம் ஏற்படுகிறது. இதை தடுக்க ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை ஓன்றாக கலந்து ஒரு நாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும்.

பின் வயலில் தேங்கிய நீர் வடிந்த பின் இட வேண்டும். சூரிய வெளிச்சம் தோன்றிய பின் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிரில் தோன்றும் இலை மடக்கு புழுவினை கட்டுப்படுத்த ஏக்கருக்கு புரோப்பினோபாஸ் 400 மிலி தெளித்து கட்டுபடுத்தலாம். இதேபோல் ஆரம்பநிலையிலே குலைநோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 100 கிராம் கார்பெண்டாசிம் பூஞ்சாணக் கொல்லியை தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Madurai ,Peranai ,Kallandri , Madurai: In Madurai district from Berani to Kallandri in 43 thousand acres of dual cultivation irrigation area for the second path.
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...