×

சிவகாசியில் உள்ள சிறுகுளம் கண்மாயில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு-பூங்கா அமைக்கும் முன் அகற்ற கோரிக்கை

சிவகாசி : சிவகாசியில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் சிறுகுளம் கண்மாயில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இப்பகுதியில் பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பணிகளை தொடங்கும் முன் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.
சிவகாசியில் பரந்து விரிந்து காட்சிதரும் சிறுகுளம் கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சிவகாசி, சாட்சியாபுரம், செங்கமலநாச்சியார்புரம், ரயில்வே காலனி குடியிருப்பு பகுதிகளின் சேரும் மழை நீர் இந்த கண்மாயில் தேங்கி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதிகளில் பருவ மழை சரிவர ெபய்யாததால் சிறுகுளம் கண்மாய் வறண்டு கிடந்தது. இதனால் கண்மாயில் இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு சிவகாசியில் வடகிழக்கு பருவமழை போதும் என கூறும் வகையில் கொட்டித்தீர்த்தது. இதனால் 15 ஆண்டுகளுக்கு பின் சிறுகுளம் கண்மாயில் தண்ணீர் நிரம்பியது. இதையடுத்து கண்மாயில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுகுளம் கண்மாயில் நீர் நிரம்பியதால் நகரில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனிடையே சிறுகுளம் கண்மாயில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து முளைத்துள்ளதால் கண்மாய் நீர் மாசடைந்து வருகிறது.

எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு பொழுது போக்கு பூங்கா போன்ற குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் இடங்கள் ஏதும் இல்லை. இதனால் மக்கள் விடுமுறை நாட்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலை தொடர்கிறது. இதே போன்று நடைபயிற்சி மேடை உள்ளிட்ட வசதிகளும் இல்லை.

எனவே சிவகாசி மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறுகுளம் கண்மாய் கரைப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.2 கோடி மதிப்பில் பொழுது போக்கு பூங்கா, மற்றும் நடை மேடை வசதி செய்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கான பூமிபூஜை மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இப்பணிக்கான டெண்டர் விடப்பட்டு சிறுகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு பகுதியில் மரங்கள், பூச்செடிகள் அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் சிறுகுளம் கண்மாய் பகுதியில் தற்போது சிறிதளவு மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் மேற்கு பகுதியில் பாதிகண்மாய் முழுவதும் தண்ணீரை பார்க்க முடியாத வகையில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து முளைத்துள்ளன.

 எனவே கண்மாய் கரைப்பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிகளை துவக்கும் முன்பு இந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி சிறுகுளத்தை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags : Agayathamar ,Sirukulam Kanmai ,Sivakasi , Sivakasi: In Sivakasi, a 100 acre small pond in Kanmai has grown and encroached upon it.
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு