×

மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலில் இருந்து சென்னை முழுமையாக மீண்டு இருக்கிறது; சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலில் இருந்து சென்னை முழுமையாக மீண்டு இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மாண்டஸ் புயல் காரணமாக சென்னை காசிமேட்டில் 100 படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளது. சுமார் 50 படகுகள் நீரில் மூழ்கியுள்ளன. காசிமேடு புயல் பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  அவர்,

மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலில் இருந்து சென்னை முழுமையாக மீண்டு இருக்கிறது:

மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலில் இருந்து சென்னை முழுமையாக மீண்டு இருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை; மரங்கள் அகற்றும் பணிகள் மட்டும் நடக்கிறது. புயலால் விழுந்த மரங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக அகற்றி உள்ளனர். திட்டமிட்டு செயல்பட்டதால் பாதிப்புகள் குறைவாக இருந்தன என்று தெரிவித்தார்.

சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் முதல்வர் பாராட்டு:

மாண்டஸ் புயலில் விடிய விடிய பணியில் இருந்த அதிகாரிகள் முதல் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அதிகாரிகள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை சிறப்பாக செயல்பட்டதாக முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.  காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மீட்பு பணி நடந்து வருகிறது.  25,000 பணியாளர்கள் மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். மாண்டஸ் புயல் பாதிப்பால் 4 பேர் இறந்த நிலையில், 98 கால்நடைகள் இறந்துள்ளன.

சேதமான விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்:

சேதமான விசைப்படகுகள் கணக்கெடுக்கப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். 3,163 குடும்பத்தைச் சேர்ந்த 9,130 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சேத மதிப்பீடு கணக்கெடுப்பு வந்தவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார்.

முன்கூட்டி திட்டமிட்டு தயாராக இருந்ததால் பாதிப்பு தவிர்ப்பு:

சென்னையை பொறுத்தவரை 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் 400 மரங்கள் விழுந்துள்ளன. 300 மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டது. வாகனப் போக்குவரத்து தடையின்றி நடைபெறுகிறது. பழுதான மின் கடத்திகளை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட 600 இடங்களில் 300 இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டி திட்டமிட்டு தயாராக இருந்ததால் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. 14 குழுக்கள் கொண்ட 496 வீரர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தேவைப்பட்டால் வெளிமாவட்டங்களில் ஆய்வு செய்வேன். தேவைப்பட்டால் மத்திய அரசிடம் நிதியுதவி கேட்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags : Chennai ,Mandus storm attack ,CM ,G.K. Stalin , Mandus Puyal, Chennai, Principal M.K.Stalin
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!