×

வால்பாறை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா

வால்பாறை : வால்பாறை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள்  திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வால்பாறை நகராட்சி கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் பாலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில்  கவுன்சிலர் வீரமணி (விசிக), மணிகண்டன் (அதிமுக) ஆகியோர் தீர்மானம் நிறைவேற்றிய வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை என்று கூறி அரங்கின் நடுவே அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கவுன்சிலர் வீரமணி கூறும்போது, ‘‘வால்பாறையில் கவுன்சிலர்கள் நிறைவேற்றி அனுப்பும் வளர்ச்சி பணிகள் இதுவரை நடைபெறவில்லை’’ என்றார். மேலும் அனைத்து கவுன்சிலர்களும் பணிகள் நடைபெறவில்லை என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.இதற்கு நகராட்சி துணைத்தலைவர் செந்தில் பதில் அளித்தார். அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சியின் போது, வால்பாறை நகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட முறையில்லா வளர்ச்சி பணிகளால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளது. தற்போது திமுக ஆட்சியில் நகராட்சி பணிகளை முறையாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இம்மாத இறுதிக்குள் வளர்ச்சி பணிகள் தொடங்கப்படும். கட்சி நிர்வாகிகள் என கூறி அரசு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சிலர் மிரட்டுவதாக அறிகிறோம். அதிகாரிகள் காவல்துறையில், தங்களை மிரட்டியவர்கள் மீது புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளி பேசுகையில், ‘‘வால்பாறையில் அரசு ஐடிஐ தொடங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி. 10ம் வகுப்பு படித்த  மற்றும் டிகிரி படித்து வேலை கிடைக்காமல் வீட்டில் உள்ள மாணவர்களை, தொழிற்கல்வி படிக்க கவுன்சிலர்கள் அறிவுரை வழங்கி, ஐடிஐ-ல் சேர்க்க நடவடிக்கை எடுத்து, முதலமைச்சரின் கனவு நனைவாக செயல்பட வேண்டும்’’ என்றார்.  கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், துாய்மை பணி ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.


Tags : Valparai , Valparai: In the Valparai municipal meeting, there was a commotion as the councilors took part in a sudden dharna. Valparai municipal meeting
× RELATED கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது