உடுமலையில் காலநிலை மாற்றம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சலால் பாதிப்பு

உடுமலை : காலநிலை மாற்றம் காரணமாக உடுமலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி மற்றும் காய்ச்சலால் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான கிராமப் பகுதிகள் உள்ளன. வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து அவ்வப்போது காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகர்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் காலநிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது. காலை 9 மணி வரை மேகமூட்டமும், பனிப்பொழிவும் நீடிக்கிறது.

 இதேபோல் மாலை 5 மணி அளவில் மீண்டும் பனிப்பொழிவு அதிகரிக்கிறது. நகர் பகுதியை விட விவசாய தோட்டங்கள் நிறைந்த கிராமப்புற பகுதிகளில் பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக உடுமலை- பொள்ளாச்சி சாலை, உடுமலை- பழனி சாலை, உடுமலை- தாராபுரம் சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் அதிகாலையில் வரும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வருகின்றனர்.

அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் கூட பனிமூட்டம் காரணமாக பாதி வழியிலேயே மீண்டும் வீடு திரும்பி விடுகின்றனர். பகலில் வெயிலும் காலை மற்றும் மாலையில் பனிப்பொழிவும் நீடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல், உடல்அசதி உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆட்படுகின்றனர்.இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

மழை, புயல் நீடிப்பதால் பொதுமக்கள் அனைவரும் காய்ச்சி வடிகட்டிய குடிநீரையே பருக வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தவிர்ப்பதற்கு ஆங்காங்கே குப்பைகளை குவித்து வைப்பதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல் ஒரு சில பள்ளி குழந்தைகளை பாதித்துள்ளது. பாதிப்புக்குள்ளான குழந்தைகளை விடுமுறை எடுத்துக் கொள்ளும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.காய்ச்சல் பீதி நிலவுவதால் உடுமலை நகர்வாழ் பகுதி மக்கள் ஸ்வெட்டர், பனிக்குல்லா உள்ளிட்ட வெம்மை ஆடைகளை விரும்பி அணிகின்றனர்.

Related Stories: