×
Saravana Stores

பக்தர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் திமுக ஆட்சியில் கண்ணகி கோயிலுக்கு வழி பிறந்தது

*இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர அரசு முடிவு

*5 மலைக்கோயில்களுக்கு பாதை ஆய்வுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

கூடலூர் : தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு கூடலூருக்கு தெற்கேயுள்ள வண்ணாத்திப்பாறை, தமிழக கேரள எல்லைப்பகுதியான, பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் உள்ள மங்கலதேவி மலையில் 4,830 அடி உயரத்தில் உள்ளது கண்ணகி கோவில் எனப்படும் கண்ணகி கோட்டம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இக்கோவில் பின்னாளில் சிதிலமடைந்ததால், சோழப்பேரரசன் முதலாம் ராஜராஜன் தன் ஆட்சிகாலத்தில் (கி.பி. 985-1014) இக்கோவிலை சோழர் கலைப்பாணியில் மீட்டமைத்தான்.

சித்திரை முழுநிலவு விழா

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலேயே கண்ணகி கோட்டத்திற்குச் செல்ல கூடலூர் அருகேயுள்ள பளியன் குடியிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கிமீ நடைபாதை இருந்தது. அப்போது இக்கோட்டத்தில் மக்கள் ஒருவாரம் தங்கியிருந்து சித்திரை முழுநிலவு விழா கொண்டாடி உள்ளனர். 1975ல் அரசு உத்தரவில், பளியன்குடி வனப்பகுதி வழியாக கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் சாலை அமைக்க, துணைப்பொறியாளர் சுவாமி அய்யா தலைமையில் 67 லட்சம் ரூபாய் திட்டமதிப்பீடு செய்து அரசிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து 1976 ஜனவரி 31ல் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டது. இதனால் கண்ணகி கோவிலுக்கு சாலை அமைக்கும் பணியும் தடைபட்டது.

1985 முதல் கண்ணகி விழா

இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கண்ணகி கோவிலுக்கு கேரள வனப்பகுதி கொக்கரக்கண்டம் வழியாக 13 கிலோமீட்டர் சாலையை கேரளா அமைத்ததோடு, இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட கேரள அரசு, கோவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருப்பதால், ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பவுர்ணமி அன்று மட்டுமே பக்தர்கள் இவ்வழி செல்ல வேண்டும். மேலும் இவ்வழி செல்ல, கேரள அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனால் 1982ல் பளியன்குடி வழியாக கண்ணகிகோவிலுக்குச் சென்ற தமிழக பக்தர்கள்மீது மரம் வெட்டவும், வேட்டையாடவும் வந்த கும்பல் என கேரள வனத்துறையினர் வழக்குப் போட்டனர். அது பொய்வழக்கு எனத்தெரிய வந்ததால் கேரள உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது. இதையடுத்து வரும் காலங்களில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க இருமாநில அரசு அதிகாரிகளும் கலந்து பேசி கண்ணகி கோட்டத்தில் சித்திரை முழுநிலவு விழா நடத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின் 1985 முதல் இருமாநில அதிகாரிகளும் கலந்து பேசி கண்ணகி விழாவை நடத்துகின்றனர்.

நடைபாதையில் நிரந்தர சாலை

ஒருவாரகால விழா காலப்போக்கில் கேரள வனத்துறையின் கெடுபிடியால் ஒருநாள் விழாவாக மாறியது. கேரளாவின் கெடுபிடி இல்லாமல் கண்ணகியை தரிசிக்க இந்த நடைபாதையில் நிரந்தர சாலை அமைக்க பக்தர்கள் கோரிவந்தனர். கடந்த 2011ல் தென்மாவட்டத்தில் எழுச்சியடைந்த பெரியாறு அணை போராட்டத்தை அடுத்து தமிழக அரசு கண்ணகி கோவிலை சீரமைக்கக்க வேண்டும், கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும், தமிழக வனப்பகுதி வழியாக கோவிலுக்கு நிரந்தரச்சாலை அமைத்தால் தமிழகத்து எல்லையிலுள்ள, தமிழ்கடவுள் கண்ணகியை தமிழர்கள் சென்று வழிபட தடை ஏதும் இருக்காது என பக்தர்கள் தொடர்ந்து அதிமுக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் தொடர்ந்து 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் கண்ணகி கோவிலை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தற்போது திமுக ஆட்சிக்கு வந்து முதல்வர் ஸ்டாலின் தேனிக்கு வருகை தந்தபோது, தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் ஜெகநாத்மிஸ்ரா உட்பட தெனிமாவட்ட பக்தர்கள் இதே கோரிக்கையை முதல்வரிடம் வைத்தனர். பக்தர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, இந்துசமய அறநிலைய துறை மானியக் கோரிக்கையில் கண்ணகி கோவில் உட்பட 5 மலைக்கோயில்களுக்கு பாதை அமைப்பதற்காக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தனர்.

மேலும் கண்ணகி கோவிலை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிவு செய்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு நோட்டீஸ் வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு செல்லும் பளியங்குடி மற்றும் தெல்லுகுடி வனபாதைகளை தமிழ்நாடு அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன், கம்பம் காசிவிஸ்நாதபெருமாள் திருக்கோவில் நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் கடந்த 5ம் தேதி ஆய்வு செய்தனர். ஏற்கனவே கடந்த இருமாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் தெல்லுகுடி பாதையை ஆய்வுசெய்தனர். தெல்லுகுடியிலிருந்து கண்ணகி கோவிலுக்கு 3.5 கிமீ தூரமே உள்ளது. அதுவும் தெல்லுக்குடியிலிருந்து இழுவை ரயில் அல்லது ரோப்கார் அமைத்தால் ஒன்றரை கிமீ தூரமே உள்ளது.

இதுகுறித்தும் அரசுக்கு அதிகாரிகள் அறிக்கை அனுப்பி உள்ளனர். தற்போது தெல்லுகுடியிலிருந்து கோவிலுக்கு பாதை அமைத்தால் கோவிலின் வடக்குப்புறம் கண்ணகி நீராடிய குளத்தருகே வந்து சேரும். கண்ணகி கோவிலில் தோரணவாயில் வடக்குப்பகுதியில் அமைந்திருப்பதில் இருந்தே கண்ணகிகோலின் பாதை வடக்குப்பக்கம்தான் (தமிழகப்பகுதி வழியாக) என்பதை புரிந்து கொள்ள முடியும். பக்தர்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு திமுக ஆட்சியில் வழி ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தார்ச்சாலை அல்லது ரோப்கார்

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன் காட்சிக்கண்ணன் கூறுகையில்,  ‘‘மங்களதேவி கண்ணகி கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வ முயற்சியை தமிழக அரசு எடுத்துவரும் நிலையில், கேரளாவில் ஒருசில பத்திரிக்கைகளில், கண்ணகிகோவில் கேரளாவுக்கு  சொந்தம் என்றும், கோவிலை தமிழக அரசு சொந்தம் கொண்டாடுகிறது என்றும் பொய்யான செய்தியை வெளியிட்டு இருமாநில மக்களின் நல்லுறவை கெடுப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு கோவிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதுடன், உடனடியாக பளியங்குடி, தெல்லு குடி வழியாக கண்ணகி கோவில் வரை தார்ச்சாலை அல்லது ரோப்கார் அமைக்கும் பணியையும் தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.’’ என்றார்.

ஆவணங்களின் வழி உறுதியானது

கண்ணகி கோவில் (கண்ணகி கோட்டம்) கேரள எல்லையில் இருப்பதால் கேரளத்துக்கே சொந்தம் என்றது கேரள அரசு. இதைத்தொடர்ந்து 1975ல் தமிழக அரசின் வருவாய்துறை அதிகாரியாக இருந்த அனந்தபத்மநாபன், அறநிலையத்துறை ஆணையர் ஆர்.சி.பண்டா, நிலஅளவை அதிகாரி முருகேசன் ஆகியோர்கள், கேரள மாநில ஆதிகாரிகளுடன் கோவிலுக்குச் சென்று, கோவில் அமைவிடத்தை அளந்து, இக்கோவில் தமிழக எல்லையில் இருப்பதை ஆவணங்களின் வழி உறுதிபடுத்தி உள்ளனர்.



Tags : Ganagi Temple ,Dizhagam , Kudalur: Theni district, Kambam Valley south of Kudalur, Vannathiparai, Tamil Nadu bordering Kerala, Periyar tigers.
× RELATED திமுக பிரமுகர் தலை கூவம் ஆற்றில் வீச்சு: போலீஸ் விசாரணை