மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு

மஞ்சூர் : மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு,மைனலாமட்டம்,பெங்கால்மட்டம்,கிட்டட்டிமட்டம், தேனாடு,கோத்திபென்,சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சமீப காலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக காட்டு மாடுகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. மேற்படி கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல வகையிலான மலைகாய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் விளை நிலங்களில் காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக புகுந்து பயிர்களை சூறையடுவதுடன் தோட்டங்களையும் கால்களால் மிதித்து நாசம் செய்து வருகின்றன. இவற்றின் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் மலைகாய்கறி விவசாயம் மேற்கொள்வதை விட்டு விட்டனர்.

மேலும் இப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடும் காட்டு மாடுகளால் தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். நேற்று முன் தினம் மஞ்சூர் அருகே மேல்குந்தா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளர் சிலர் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது 10கும் மேற்பட்ட காட்டு மாடுகள் கூட்டமாக தேயிலை தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இதை கண்ட தொழிலாளர்கள் தேயிலை பறிப்பதை கைவிட்டு தோட்டத்தில் இருந்து வெளியேறினார்கள்.

இதேபோல் நேற்று மஞ்சூர் ஊட்டி சாலையில் நுந்தளா மட்டம் பகுதியில் 3  காட்டு மாடுகள் சாலையோரத்தில் நீண்ட நேரம் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது.

இதனால் அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே பயணித்தனர். மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக காட்டு மாடுகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இவற்றின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related Stories: