×

முறையாக செயல்படாத 200 குழந்தைகள், முதியோர் இல்லங்கள் மூடல்

*பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடை சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் குறித்து நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் கீதாஜீவன், தமிழகம் முழுவதும் முறையாக செயல்படாத 200 குழந்தைகள், முதியோர் இல்லங்கள் மூடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்புத் தடைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தூத்துக்குடி நிலா சீ புட்ஸ் நிறுவன வளாகத்தில் நடந்தது.

கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழக அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. அதன்படி அதிகமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இடங்களில் சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும்.

காமிரா இல்லாத பகுதிகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும். இதில் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர், முகவரி போன்றவை ரகசியமாக வைக்கப்படும். நிலா சீ புட்ஸ் போன்ற சரியான முறையில் செயல்படும் நிறுவனத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது பொருத்தமானதாகும். 10க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் புகார் பெட்டிகளை வைக்க உள்ளோம். மேலும் 1800 என்ற தொலைபேசி எண்ணிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம். இதற்காக மாவட்டத்திற்கு ஒரு ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம் ஆகியவற்றை வரைமுறைப்படுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு முறையாக செயல்படாத 200 இல்லங்கள் மூடப்பட்டுள்ளது. அதில் உள்ளவர்களை முறையாக செயல்படக் கூடிய பிற இல்லங்களுக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது, என்றார்.
நிகழ்ச்சியில் வக்கீல் ஸ்வர்ணலதா கருத்துரை வழங்கி பேசினார்.

நிலா குரூப் ஆப் கம்பெனிஸ் நிர்வாக இயக்குநர் செல்வின் பிரபு, பொதுமேலாளர் சோமன்ராய், உற்பத்தி பிரிவு பொதுமேலாளர் வேல்முருகன், மனிதவள மேலாளர் ஜெயசீலன், மேலாளர் சாந்தகுமார், நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் ராஜமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஷெலின் நன்றி கூறினார்.



Tags : Thoothukudi: An awareness program was held in Thoothukudi about the Prevention of Sexual Harassment of Women Act
× RELATED தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக...