அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?: மொராக்கோ போர்ச்சுகல் பலப்பரீட்சை

கத்தார் உலக கோப்பையில் எஞ்சியிருக்கும் ஒரே ஆப்ரிக்க அணி மொராக்கோ. முதல் முறையாக லீக் சுற்றை தாண்டி நாக் அவுட் சுற்றில் நுழைந்ததுடன், அதன் முதல் சவாலில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதியிலும் கால் வைத்துள்ளது. 6 வது முறையாக  உலக கோப்பை தொடரில் விளையாடுகிறது. லீக் சுற்றில் கனடா, பெல்ஜியம் அணிகளுக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்த மொராக்கோ, குரோஷியாவுக்கு எதிராக சமன் செய்தது. ஒரு போட்டியில் கூட தோற்காமல் காலிறுதி வரை வந்துள்ளதே இந்த அணிக்கு பெரிய சாதனை தான்.

 

மொராக்கோவை எதிர்த்து விளையாடும் போர்ச்சுகல் அணி  8வது முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறது. 2006ல் மட்டும் அரையிறுதி வரை முன்னேறி 4வது   இடம் பிடித்தது. நடப்பு தொடரில் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவையே பெஞ்ச்சில் உட்கார வைக்கும் அளவுக்கு திறமையான இளம் வீரர்களை களமிறக்கி அசத்தி வருகிறது.

லீக் சுற்றில் கானா, உருகுவே அணிகளை போட்டுத் தள்ளிய போர்ச்சுகல், தென் கொரியாவிடம் போராடி தோற்றது. எனினும், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக அரை டஜன் கோல் அடித்து அமர்க்களப்படுத்தியது. அதிலும், அறிமுக வீரராகக் களமிறங்கிய கொன்சாலோ ராமோஸ் ஹாட்ரிக் சாதனை படைத்து அசத்தினார். புரூனோ பெர்னாண்டஸ், ரொனால்டோ என நட்சத்திர வீரர்களுக்கும் பஞ்சமில்லை.  

இந்த 2 அணிகளும் இதுவரை 2 முறைதான் சர்வதேச ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவை இரண்டுமே உலக கோப்பையில் நடந்த ஆட்டங்கள். 1986ல் மொராக்கோவும், 2018ல் போர்ச்சுகலும் வென்றுள்ளன. உலகத் தர வரிசையில் போர்ச்சுகல் 9வது இடத்திலும், மொராக்கோ 22வது இடத்திலும் உள்ளன. அரையிறுதிக்கு முன்னேற இரு அணிகளுமே வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Related Stories: