தமிழக மக்கள் கவலைப்பட வேண்டாம்; மதுரையில் எய்ம்ஸ் நிச்சயமாக வரும்: மக்களவையில் ஒன்றிய சுகாதார அமைச்சர்

புதுடெல்லி: ‘தமிழக மக்கள் கவலைப்பட வேண்டாம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக கட்டி முடிக்கப்படும்’ என மக்களவையில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2015ம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடம் கடந்த 2018ல் தேர்வு செய்யப்பட்டது.

பின்னர், 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் அதன் பிறகு மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணியையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. மதுரை எய்ம்ஸ் அறிவிப்புக்குப் பிறகு வேறு சில வடமாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போது கட்டப்பட்டு திறக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடர்பாக மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில், ‘‘மதுரை எய்ம்ஸில் மாணவர்களுக்கான வகுப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. நிரந்தர கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கும். முதலில் ரூ.1200 கோடி பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது அது திருத்தப்பட்டு ரூ.1900 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மூலம் தமிழக மக்களுக்கு சேவை செய்ய ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே கவலைப்பட தேவையில்லை. இத்திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம். நல்ல முறையில் மதுரை எய்ம்ஸ் கட்டிடம் கட்டி முடிக்கப்படும்’’ என்றார்.

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எச்சரிக்கை: பிற கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘‘தரமான கல்வியை வழங்கக் கூடிய போதுமான ஆசிரியர்களை நியமிக்காத தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்பை விரிவுபடுத்த புதிதாக 157 மருத்துவ கல்லூரிகள்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: