×

மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ளதால் சென்னையில் மிக அவசியமான காரணங்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்: பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வேண்டுகோள்

சென்னை: மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். எனவே பொதுமக்கள் மிக அவசியமான காரணங்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலானது இன்று இரவு ஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மாண்டஸ் புயலானது கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றுடன் மழையும் இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்பு படையினரின் ஆறு குழுக்கள் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட தமிழக காவல்துறையைச் சேர்ந்த தேசிய நீச்சல் வீரர்கள் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த நீச்சல் வீரர்களை கொண்ட 50 பேர், மீட்பு பணி தளவாடங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

கடலோர பகுதிகளில் படகுகளுடன் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், புயல் மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவுவதற்கும், மீட்பு பணியில் ஈடுபடுவதற்கும் காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவை தொடர்ந்து மாநகர போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு மாண்டஸ் புயல் காரணமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதில், ‘பொதுமக்கள் கவனத்திற்கு மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது’.

எனவே பொதுமக்கள் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நேரத்தில் தேவையின்றி வாகனங்களில் வெளியே செல்ல வேண்டாம். வீட்டிற்கு தேவையைான குடிதண்ணீர், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே கடைகளில் வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Mandas ,Chennai ,Police Commissioner ,Shankar Jiwal , As Cyclone Mantus makes landfall in Chennai, only come out for essential reasons: Police Commissioner Shankar Jiwal appeals to public
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...