×

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் ராஜ கோபுரத்தை சிதிலமடைய செய்யும் செடி, கொடிகள்-தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் : வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் ராஜ கோபுரத்தை சிதிலமடைய செய்யும் வகையில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்தியாவில் தரைக்கோட்டைகளில் மிக வலுவானதாக விளங்கி வருவது வேலூர் கோட்டை. வேலூர் கோட்டைக்கு வெளிநாடு, வெளிமாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி மிக முக்கிய இடமாக திகழும் வேலூர் கோட்டையை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ₹33 கோடியில் அகழி தூர் வாருதல், மின்விளக்குகள் அமைத்தல், நடைபாதைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், நடைபாதைகள் சீராக அமைக்கப்படவில்லை, அகழியும் முழுமையாக தூர்வாரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது. இதுஒருபுறம் இருக்க, கோட்டையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தொல்லியல் துறை கோட்டை பராமரிப்பு பணிகளில் அக்கறை காட்டவில்லை என்ற மற்றொரு குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளது.  வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் செடி, கொடிகள் முளைத்து ராஜகோபுரத்தையே சிதிலமடைய செய்யும் நிலைக்கு மாறியுள்ளது.

முன்பு, கோட்டையின் சுவர்கள், கோயில் வளாக சுவர்களில் முளைக்கும் செடி, கொடிகள் தொல்லியல் துறை சார்பில் அகற்றி பராமரிக்கப்பட்டது. இப்பணிகள் சமீபகாலமாக நடைபெறாததால் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் ஆங்காங்கே செடி, ெகாடிகள் முளைத்து வேகமாக வளர்ந்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கோட்டை அகழியிலும் செடி, கொடிகள் முளைத்து கற்கோட்டையை சிதைத்து வருகின்றன.

எனவே தொல்லியியல் துறை அதிகாரிகள் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் முளைத்துள்ள செடி, கொடிகள் மற்றும் அகழி சுவர்களில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : Vellore Fort Jalakandeswara Temple , Vellore: Archeology to remove sprouts, vines to ruin Vellore Fort Jalakandeswarar Temple Raja Gopuram
× RELATED எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி...