×

சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்பேட்டை மண்டிக்கு வெல்லம் வரத்து அதிகரிப்பு-வியாபாரிகள் தகவல்

சேலம் : சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் செவ்வாய்பேட்டை மண்டிக்கு வெல்லம் வரத்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர், காமலாபுரம், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும், இதைதவிர தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களிலும் வெல்லம் உற்பத்தியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் உள்பட பல மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி சபரிமலை சீசன் தொடங்கியது. அன்று முதல் வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் சேலம் உள்பட பல மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தி வழக்கத்தைவிட 30 முதல் 40 சதவீதம் கூடியுள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை உற்பத்தியாளர்கள் அவ்வப்போது விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையின்போது வெல்லத்தின் தேவை அதிகரிக்கும். இதனால் உற்பத்தியாளர்கள் தீவிரமாக வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை உற்பத்தியாளர்கள், செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள வெல்ல மண்டிக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இங்கு சேலம், தர்மபுரி, நாமக்கல், கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, சென்னை உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த வெல்லம் வியாபாரிகள் வந்து ஏலம் எடுக்கின்றனர்.

இதுகுறித்து சேலத்தை சேர்ந்த வெல்லம் வியாபாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ெவல்லம் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இங்கு நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் வெல்லம் உற்பத்தி செய்யப் படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை வியாபாரிகள் தினசரி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த இரு மாதத்தை காட்டிலும் தற்போது வெல்லம் உற்பத்தி கூடியுள்ளது.

வழக்கமாக 60 முதல் 70 டன் வெல்லம் விற்பனைக்கு வரும். கடந்த சில நாட்களாக 80 முதல் 100 டன் வெல்லம் விற்பனைக்கு வந்து ெகாண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ₹1,230 முதல் ₹1,290 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லரையில் ஒரு கிலோ வெல்லம் ₹41 முதல் ₹43 வரை விற்கப்படுகிறது. ஏலத்தில் எடுக்கப்படும் வெல்லத்தை வியாபாரிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். பண்டிகை காலம் என்பதால் கடந்த மாதத்தைவிட நடப்பு மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Tags : Sevaipettai ,Pongal , Salem: Due to the Sabarimala season and the Pongal festival, traders have reported an increase in the arrival of jaggery at the Salem Sewwaipet mandi.
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...