×

முத்துப்பேட்டை வட்டாரத்தில் இதுவரை 10,000 கால்நடைகளுக்கு இலம்பி நோய் சிகிச்சை-நோயை கட்டுப்படுத்த மருத்துவர் ஆலோசனை

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் 10ஆயிரம் கால்நடைகளுக்கு இலம்பி நோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.திமுக தலைமையிலான தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் கால்நடை பராமரிப்பு துறைசார்பில் பல்வேறு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் மாடுகளில் பரவி வந்த இலம்பி தோல் நோய் தற்போது தமிழகத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

இந்நோய் மாட்டினங்களை தாக்கும் அம்மை போன்ற ஒரு நச்சுயிரி நோய் ஆகும். இதனால் தலை, கழுத்து, உடம்பு, கால்கள், மடி போன்ற அனைத்து பகுதிகளிலும் தோலில் 2-5 செ.மீ அளவுள்ள அம்மை போன்ற கட்டிகள் ஏற்படும். இதை கவனிக்காமல் விட்டால் கட்டிகள் சீழ் பிடித்து புண்ணாகி புழுக்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. இந்நோயானது கொசு, உண்ணி, ஈக்கள் மற்றும் கடிக்கும் பூச்சிகள் மூலம் பரவக்கூடியது. மேலும், பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு எச்சில், சளி, பால், விந்தணு வழியாக விரைவாக பரவக்கூடியது. இந்நோய் வராமல் தடுக்க மாட்டுக்கொட்டகையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். மாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். உடனடியாக அருகே உள்ள கால்நடை டாக்டருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

சந்தைகளில் மாடுகள் வாங்குவதை இயன்ற வரை சில வாரங்களுக்கு தவிர்க்க வேண்டும். இந்தநிலையில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சிகளிலும் விவசாயிகள் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் இந்த ஒன்றியத்தில் லட்சக்கணக்கான மாடுகள் உள்ளன. இவைகளுக்கு இலம்பி நோய் வராமல் இருக்க முத்துப்பேட்டை கால்நடை பராமரிப்பு துறையினரால் தீவிரமாக சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.

முத்துப்பேட்டை வட்டாரத்தில் பெத்தவேளாண்கோட்டகம், வீரன்வயல், பாண்டி, மருதவனம், ஆரியலூர், தில்லைவிளாகம், உப்பூர், கள்ளிக்குடி, பின்னத்தூர் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு கால் நடை மருத்துவர் மகேந்திரன் தலைமையில் மருத்துவர்கள் ராஜசேகர், ராஜேஷ்குமார், கால்நடை ஆய்வாளர்கள் நிர்மலா, முருகேஷ், கால்நடை உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், வீரமணி, சண்முகம், மகாலட்சுமி ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் இதுவரை சுமார் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு இலம்பி நோய் சிகிச்சை அளித்துள்ளனர்.

சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மீதி உள்ள கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி அளிக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த சிறப்பு முகாமில் ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய்க்கு எதிரான தடுப்பு ஊசியும் குடல்புழு நீக்கம் சினை பரிசோதனை, சினை ஊசி போன்ற சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டது. முத்துப்பேட்டை வட்டாரத்தில் கால்நடைகளுக்கு வரும் இலம்பி நோயை முற்றிலும் ஒழிக்க கால்நடை பராமரிப்பு துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவது இப்பகுதி விவசாயிகளையும் கால்நடை வளர்ப்போர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கால்நடைகளுக்கு வரும் இலம்பி நோய் கட்டுப்படுத்துவது தொடர்பாக முத்துப்பேட்டை கால்நடை மருத்துவர் மகேந்திரன் கூறியுள்ளதாவது:“இலம்பி தோல் நோய் வைரஸ் நச்சுயிரியால் ஏற்படும் அம்மை வகையைச் சார்ந்த நோய் ஆகும். இந்நோய் பூச்சிக்கடி மூலம் பரவுகிறது. இந்நோய் தாக்கிய மாடுகளின் தோலின் மேல் கட்டிகள் தோன்றும், சில மாதங்களில் வடுக்கள் மறைந்து ரோமம் முளைத்து விடும். கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிப்பதன் மூலம் இந்நோய் தாக்காமலும், மற்ற கால்நடைகளுக்குப் பரவாமலும் தடுக்கலாம்.மேலும் சந்தேகம் இருப்பின் எனது இந்த 7373778766 செல் நம்பருக்கு எந்தநேரத்திலும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

எப்படி பரவுகிறது

கொசு, ஈ, உன்னி கடி மற்றும் பாதிக்கப்பட்ட மாடு மூலமாக இந்த நோய் பரவுகிறது. கறவையாளர்கள் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது. கன்றுக் குட்டிகள் பாதிக்கப்பட்ட மாட்டின் பால் அருந்தும் போதும் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மாடு வாங்கி வந்தால் அதன் மூலமாகவும் பரவுகிறது. இந்த வைரஸ் கிருமியானது மாட்டின் தோல் மற்றும் காயங்களில் 18 முதல் 35 நாட்கள்வரை வாழும்.

அறிகுறிகள்

கண்ணில் நீர் வடிதல் மற்றும் மூக்கில் சளி ஒழுகுதல் போன்றவை ஆரம்ப அறிகுறிகள். மாடுகள் சோர்வாகக் காணப்படும். கால்கள் வீங்கி இருக்கும்.

சிகிச்சைகள்

இந்த நோய்க்குத் தற்சமயம் தடுப்பூசி கிடையாது. அதனால் வரும் முன் காப்பதே நல்லது.நோய் அறிகுறி தென்பட்ட உடனே அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவரை அணுகுவது சிறந்தது.

நோய்தொற்றின் பாதிப்புகள்

இந்த நோய் தொற்று 60சதவீதம் மாடுகளைப் பாதிக்கும். பால் உற்பத்தி குறையும்.சினை பிடித்தல் பாதிப்புகள் ஏற்படும். சில மாடுகள் மடிநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதிக அளவில் நோய் தொற்று ஏற்பட்டாலும் இறப்பு சதவிகிதம் மிகக் குறைவு.

Tags : Thirupapattu , Muthuppet: 10,000 cattle in Muthupet area, Tiruvarur district treated for ilambi disease.
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...