×

22 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும்: 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் இரவு தீவிர புயலாக மாறியது. அது இன்று இரவு மாமல்லபுரம்- அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் 22 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் அந்தமான் அருகே காற்றழுத்தம் வலுப்பெற்று 7ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் அது மாண்டஸ் புயலாக மாறியது. நேற்று காலை  நிலவரப்படி அந்த புயல் காரைக்காலுக்கு 460 கிமீ கிழக்கு- தென்கிழக்கிலும், சென்னைக்கு 440 கிமீ தென்கிழக்கே நிலை கொண்டு இருந்தது. நேற்று மதியத்துக்கு பிறகு மாண்டஸ் புயல் மேற்கு- வட மேற்கு திசையில் சுமார் 13 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கி தமிழக கடலோரப் பகுதியை நோக்கி வந்தது. இந்த நகர்வின் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்தது.

மேலும், வட மாவட்டங்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம்,  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. இதையடுத்து, நேற்று இரவு மாண்டஸ் தீவிர புயலாக மாறி மேலும் மேற்கு மற்றும் வட மேற்கு திசையில்  நகரத் தொடங்கியது. அப்போது மணிக்கு 80 கிமீ வேகம் முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசியது. சில நேரங்களில் மணிக்கு 100 கிமீ வேகத்திலும் காற்று வீசியது. அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து அதிகாலையில் கடலோரப் பகுதியில் நிலை கொண்டது. இன்று காலையில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் காற்று வீசும்.

சில நேரங்களில் 95 கிமீ வேகத்திலும் வீசும். புயல் கடலோரப் பகுதியில் நிலை கொள்வதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இது தவிர திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். மேலும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை என 19  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

மேற்கண்ட மழை குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல் பரவலாக பெய்யும். இன்று மதியத்துக்கு பிறகு மாண்டஸ் தீவிர புயலாக மாறி தமிழக கடற்கரையை நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பிறகு இரவில் அந்தபுயல் வலுவிழக்கும் என்றும் வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்து பெங்களூர் வழியாக அரபிக் கடல் நோக்கி பயணிக்கும். அதன் காரணமாக 10ம் தேதியும் தமிழகத்தில் கனமழை பெய்யும். மேற்கண்ட நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் 22 மாவட்ட ஆட்சியர்கள்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். பள்ளி கல்லூரிகளில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட பருவத் தேர்வுகள் மாதாந்திர தேர்வுகள், பயற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்தந்த கல்வி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த புயல் காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் பிற துறைமுகங்களில் 1, 2, 3 புயல் எச்சரிக்கை கூண்டுகளும் ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருவாரூர், சேலம், பெரம்பலூர், தஞ்சை, அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல் பரவலாக பெய்யும். இன்று மதியத்துக்கு பிறகு மாண்டஸ் தீவிர புயலாக மாறி தமிழகத்தை நெருங்கும்.

Tags : Cyclone , Holidays announced for schools in 22 districts Cyclone Mandus to make landfall tonight: 'Red Alert' for 4 districts
× RELATED மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை தராத...