கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான புதிய பாட திட்டங்கள் 10 நாளில் பல்கலைக்கு அனுப்பி வைக்கப்படும்: தமிழ்நாடு உயர் கல்வி மன்ற துணை தலைவர் ராமசாமி தகவல்

சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்காக தயாரிக்கப்பட்ட புதிய பாட திட்டங்கள் கல்வியாளர்களின் கருத்து கேட்டு இன்னும் 10 நாளில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தின் துணை தலைவர் ராமசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின் படி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் கல்வியாண்டில் புதிய பாட திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதற்கு அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு, அதை தயாரித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் துணை தலைவர் ராமசாமி கூறுகையில்: மூத்த அனுபவமிக்க பேரசிரியர்களை வைத்து இந்த புதிய பாட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலை கழகத்துக்கும் இன்னும் 10 நாளில் இதற்கான வரைவு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இந்த வரைவு அறிக்கையில் தேவையான மாற்றங்களை செய்துகொள்ள பல்கலை கழகங்ளுக்கு 10 நாள் அவகாசம் அளிப்போம். அதிக வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் வகையிலும், இதில் தமிழ் வெறும் பாடமாக மட்டும் இல்லாமல் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். எனவே, தமிழ் படித்த மாணவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சில தொழில்கள் தோல்வி அடைவதற்கான காரணம், அதனை தோல்வி அடையாமல் கொண்டு வருவதற்கான காரணம், புதிய அணுகுமுறை, காப்புரிமை பெறுவது, பெண்கல்வி உள்ளிட்ட அனைத்து வகையான பாடங்களும் இதில் இடம் பெறும். மாணவர்களின் வெற்றிதான் இந்த புதிய பாடத்திட்டத்தின் நோக்கம். மாநில அரசின் கீழ் உள்ள 13 பல்கலை கழகங்களின் 1,500 கல்லூரிகளில் இந்த புதிய பாடத்திட்டம் நடைமுறை படுத்தப்பட உள்ளது. தரமான முறையில் மாற்றி அமைக்கப்பட்ட இந்த பாட திட்டம் வெற்றி வாய்ப்பை பெறும் வகையில், மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற வகையில் வடிவமைத்துள்ளோம்.

இதற்காக இளங்கலை மற்றும் முதுகலை என தனித்தனியாக பிரித்து 200 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. 450 மூத்த அனுபவமிக்க வல்லுநர்கள் இதில் கலந்து கொண்டனர். ஏற்கனவே இருந்த 91 பாடங்களை 130 பாடங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் இவற்றிலும் சில மாற்றங்கள் இருந்தாலும் அவற்றையும் மாற்றி அனைத்து பல்கலை கழகங்களுக்கும் அனுப்பி வைப்போம். இவற்றில் சிறிது மாற்றம் தேவை எனில் பல்கலை கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகள் மாற்றிக்கொள்ளலாம். இவற்றில் அதிகபட்சமாக 25% பாட திட்டங்களை தன்னாட்சி கல்லூரிகள் மாற்றிக்கொள்ளலாம்.

* எது படித்தால் வேலை கிடைக்கும்?

படித்துவிட்டு வெளியே செல்லும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். எனவே தமிழகத்தில் உள்ள 18 தொழிற்துறை நிறுவனங்களை அழைத்து ஆலோசனை நடத்தினோம். எவற்றை படித்தால் அந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற முடியும் என்ற ஆலோசனையை அவர்களுடன் நடத்தினோம். அதன் அடிப்படையிலும் பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

Related Stories: