×

சொத்து குவிப்பு குற்றச்சாட்டு உத்தவ் தாக்கரே மீது விசாரணை துவங்கியது: மும்பை ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

மும்பை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றச்சாட்டில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மீது முதற்கட்ட விசாரணை துவங்கியுள்ளதாக, ஐகோர்ட்டில் போலீசார் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகன்ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் மீது, மும்பை, தாதரைச் சேர்ந்த கவுரி பிடே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். நெருக்கடி காலத்தில் இவரது குடும்பத்துக்கு சொந்தமான அச்சகத்தில் சாம்னா பத்திரிகை அச்சிடப்பட்டது. பிடே மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ராஷ்மி தாக்கரே, மகன்கள் ஆதித்ய தாக்கரே தேஜஸ் உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். வர்த்தகம் அல்லது பணியின் மூலமாக இந்த சொத்து வந்தது என்பதற்கான எந்த சான்றையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.

சாம்னா பத்திரிகை, மார்மிக் மாத இதழ் நடத்துகின்றனர். ஆனால், இவை ஏபிசி தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை. கொரோனா ஊரடங்கின்போது அனைத்து பத்திரிகைகளும் நஷ்டத்தைச் சந்தித்தன. ஆனால், தாக்கரேயின் இந்த பத்திரிகைகள் மூலம் ₹42 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளதாகவும், ₹11.5 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் கணக்கில் காட்டியுள்ளனர். எனவே, இதன்மூலம் கருப்பு பணத்தை மாற்றியிருக்கலாம். உத்தவ் தாக்கரே பினாமிகள் பெயரில் அதிக சொத்துக்களை வைத்துள்ளார். அரசியல் அழுத்தம் காரணமாக அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, போலீசில் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில், ஒன்றிய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, நீதிமன்றத்தில் மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீரஜ் தாக்குர், வால்மீகி மெனேசஸ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதன் மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். இதற்கிடையே, மும்பை நீதிமன்றத்தில் அரசு பிளீடர் அருணா பய் ஆஜராகி, ‘உத்தவ் தாக்கரே மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக, மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணையைத் துவங்கியதாக குறிப்பிட்டார்.

Tags : Uddhav Thackeray ,Mumbai High Court , Investigation begins against Uddhav Thackeray in asset hoarding case: Police information in Mumbai High Court
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!