×

வேட்டை கும்பல், வனத்துறை இடையே துப்பாக்கி சண்டை: தமிழக - கர்நாடக எல்லையில் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பர்கூர் அடுத்த சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்டது பாலாறு பீட். இங்குள்ள வாளாங்குழிப் பள்ளத்தில் இரவு துப்பாக்கிடன் சிலர் நுழைந்துள்ளதாக சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனச்சரகர் ராஜா தலைமையில் வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என 9 பேர் நள்ளிரவு அப்பகுதிக்கு சென்றனர். அங்கு பதுங்கிய கும்பலை நிற்கும்படி வனத்துறையினர் எச்சரித்தனர்.

ஆனால், கும்பல் வனத்துறையை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வனத்துறையினர் பாறையின் பின்புறம் சென்று தப்பினர். அதன்பின், வனத்துறையினர் தரையை நோக்கி சுட்டனர். சுதாரித்த கும்பல் தப்பி ஓடியது. இதில், ஒருவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் கோவிந்தபாடியை சேர்ந்த குமார் (40) என்பது தெரியவந்தது.

குமாரிடம் நடத்திய விசாரணையில், தப்பி ஓடியவர்கள் ராஜா (எ) காரவடையான், பச்சைக் கண்ணன், ரவி என்பதும் இவர்கள் 2 நாட்டு துப்பாக்கிகளுடன் மான் வேட்டைக்கு சென்றதும் தெரியவந்தது. வனப்பகுதியில் கும்பல் மறைத்து வைத்திருந்த மான் கறி, பால்ரஸ் குண்டுகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து பிடிபட்ட குமாரை கைது செய்தனர்.


Tags : Tamil Nadu ,Karnataka , Gunfight between poaching gangs, forest department: Tamil Nadu-Karnataka border riots
× RELATED பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை...