ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு: வடிவுடையம்மன் கோயிலில் மழையில் நனைந்தபடி பக்தர்கள் சாமி தரிசனம்

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையா னது. இங்கு ஆண்டு முழுவதும் மூலவர் ஆதிபுரீஸ்வரர் தங்க நாக கவசம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளன்று ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டிருக்கும் தங்க நாக கவசம் திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு மட்டும் கவசமின்றி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.

இதன்படி இந்தாண்டு கார்த்திகை பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று மாலை 6  மணிக்கு ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டுள்ள கவசம் திறக்கப்பட்டு மஹா அபிஷேகம் மற்றும் புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்பட பலர் தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில், இன்று காலை திருவொற்றியூர் பகுதியில் மழை பெய்தது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்தப்படியும் மழையில் நனைந்தபடியும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர். நாளை இரவு 8 மணி வரை ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க முடியும். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: