×

குண்டாற்று தடுப்பணையிலிருந்து திருச்சுழி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருச்சுழி: குண்டாற்று தடுப்பணையிலிருந்து திருச்சுழி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி பெரிய கண்மாய் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் ஐந்து மடைகள் கொண்டு அமைந்துள்ளது. இந்த கண்மாய் உரிய முறையில் தூர்வாரி பராமரிக்கப்படாததால் திருச்சுழி, பச்சேரி, தமிழ்பாடி ஆகிய மூன்று கிராம விவசாயிகள், சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசு நிலங்களாகின.

மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே சென்றது. இதனை தொடர்ந்து விவசாய குடும்பத்தினர் திருச்சுழி கண்மாயை நம்பி இருந்ந நிலையில் பல வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், குண்டாறு குறுக்கே பந்தனேந்தல் பகுதியில் தடுப்பணை கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 10 கோடியே 10 லட்ச ரூபாய் செலவில் தடுப்பணை பணிகள் முடிவடைந்து மக்கள் பயனுக்கு வராமல் போனது.

இதனை தொடர்ந்து திருமங்கலம் பகுதியில் மழை பெய்ததால் குண்டாற்றில் மழைநீர் ஓரளவிற்கு வந்த நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு புதியதாக கட்டப்பட்ட பந்தனேந்தல் தடுப்பணை நிரம்பி குண்டாற்றில் தண்ணீர் வீணாக சென்றது. தடுப்பணையிலிருந்து திருச்சுழி கண்மாய்க்கு தண்ணீரை திருப்பி விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கையை தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தடுப்பணையிலிருந்து திருச்சுழி கண்மாய்க்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி சிலநாட்கள் கூட நீடிக்கவில்லை என வேதனையுடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் தடுப்பணையிலிருந்து பந்தனேந்தல் கண்மாய் வருகின்ற கால்வாயில் வரும் உபரிநீர் செல்ல மூன்று கழுங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பணையிலிருந்து அதிக நீர் திறந்து விடும் பட்சத்தில் திருச்சுழி கண்மாயிக்கு தண்ணீர் செல்லாமால் கழுங்குகள் வழியாக மீண்டும் குண்டாறு செல்வதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் தடுப்பணைக்கும் கழுங்குகள் இருக்கும் இடையே உள்ள பகுதி மேடாக இருப்பதால் தண்ணீர் திருச்சுழி கண்மாய்க்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியினை தூர்வார வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தடுப்பணையில் ஷட்டர் திறப்பது எளிதாக உள்ளதால் அதிகாரிகள் தண்ணீரை திறந்து விட்டுச் சென்றாலும், சில மர்ம நபர்கள் மீண்டும் ஷட்டரை அடைத்து விடுவதால் தண்ணீரை கண்மாய்க்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே திருச்சுழி கண்மாயிக்கு குண்டாறில் வருகின்ற நீரை கொண்டு செல்ல அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இளையராஜா விவசாயி கூறுகையில், ‘‘பந்தனேந்தல் பகுதியில் தடுப்பணை கட்ட பல ஆண்டுளாக கோரிக்கை விடுத்த பின்னர் தடுப்பணை கட்டப்பட்டு திருச்சுழி கண்மாய்க்கு நீர் திறந்து விடப்பட்டது. பந்தனேந்தல் கண்மாயிலிருந்து வெளியேறக்கூடிய பகுதி மேடாக இருப்பதால் திறக்கப்படும் தண்ணீர், கழுங்குகள் வழியாக மீண்டும் ஆற்றுக்கு சென்று விடுகிறது. கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு ஷட்டர் அமைத்து மழை நீர் உபரி நீராக வெளியேறியது. அதே போன்று அந்த பகுதியில் ஷட்டர் அமைத்து இந்நீரை திருச்சுழி கண்மாய்க்கு நீரை கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சீனிவாசகன் கூறுகையில், ‘‘பல போராட்டங்களுக்கு பின்னர் பந்தனேந்தல் பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. தடுப்பணை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் திருச்சுழி கண்மாயிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தடுப்பணையிலிருந்து பந்தனேந்தல் கண்மாய் வரை முறையான நீர்வழித்தடங்கள் இல்லாததால், கரைகளை மேம்படுத்தினாலும் தண்ணீர் சீராக செல்வதில்லை. ஆகையால் மண் அரிப்பு தடுப்பு விதமாக இருபுறம் கான்கீரிட் கால்வாய் அமைத்து தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார்.

இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பந்தனேந்தல் தடுப்பனையிலிருந்து ஷட்டர் திறக்கப்பட்டு கால்வாயில் செல்லக்கூடிய தண்ணீரை மீண்டும் மர்ம நபர்கள் ஷட்டரை மூடி தண்ணீர் செல்லாமல் தடுப்பது குறித்து விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். இதுசம்மந்தமாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். அதே போன்று திருச்சுழி பகுதியில் சரிவர மழை பெய்யாததால் பெரும்பாலான கண்மாயில் நீர்வரத்து இன்றி காணப்படுகின்றன. கால்வாயில் செல்லகூடிய நீர் கழுங்கு வழியாக குண்டாற்றுக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

திருச்சுழி கண்மாய் கருவேலம் மரங்கள் அகற்றப்படுமா?
மேலும் பல ஆண்டு கோரிக்கைக்கு பின் இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு பல கோடி மதிப்பில் தடுப்பணை கட்டி தண்ணீரானது திருச்சுழி கண்மாய்க்கு ஓரளவு வந்த போதிலும் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் முழுவதும் சீமைகருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வரும் தண்ணீரானது நிறம் மாறுவதுடன் வெகு விரைவாக உறிஞ்சிவிடுகிறது. ஆகவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு முள் செடிகளை முற்றிலுமாக அகற்றி விட்டு பயன் தரும் மரங்களை வளர்க்க வேண்டும் எனவும். கண்மாய்க்கரை ஓரங்களில் ஊராட்சி நிர்வாகத்தால் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kuntaru Barrage ,Thiruchuzhi Kanmai , Kuntaru Barrage, Thiruchuzhi Kanmai, Farmers' Demand
× RELATED குண்டாற்று தடுப்பணையிலிருந்து...