பவுர்ணமி கிரிவலத்தில் தரிசனம் தந்த அண்ணாமலையார்: வழிநெடுகிலும் மாலை அணிவித்து பக்தர்கள் சாமி தரிசனம்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற அண்ணாமலையார், உண்ணாமலையம்மனை பக்தர்கள் வழிநெடுகிலும் மாலை அணிவித்து வழிபட்டனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 6ம் தேதி மகாதீபம் ஏற்றப்பட்டதுடன் தீபத்திருவிழா முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நடந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை மாதம் பவுர்ணமி கிரிவலமானது இன்று தொடர்கிறது. அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் ராஜகோபுரம் முன்பு உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் சுவாமிக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். அண்ணாமலையார் கோவிலில் மகாதீபத்தை காண 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்திருந்த நிலையில், அவர்களுக்கென தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. மகாதீபம் தரிசனம், கிரிவலம் பயணத்தை நிறைவு செய்த பக்தர்கள், சொந்த ஊர் செல்ல ரயில் நிலையங்களில் குவிந்துள்ளனர். பக்தர்கள் காத்திருந்து ரயில் ஏறி வருவதால் 2வது நாளாக ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Related Stories: