அம்பேத்கர் சிலைக்கு அர்ஜூன் சம்பத் மாலை போட வந்த போது தகராறு; வன்னியரசு உட்பட 29 பேர் மீது வழக்கு

சென்னை: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அர்ஜூன் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக விசிகதுணை பொதுச்செயலாளர் வன்னியரசு உட்பட 29 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு  இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அர்ஜூன் சம்பத் மாலை அணிவிக்கக் கூடாது என்று அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதனால் இந்து மக்கள் கட்சியினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அர்ஜூன் சம்பத் மணிமண்டபம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதைதொடர்ந்து இந்து மக்கள் கட்சி சார்பில் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் வி வன்னியரசு உட்பட அக்கட்சி நிர்வாகிகள் மீது புகார் அளித்தனர்.

இதையடுத்து  பட்டினப்பாக்கம் போலீசார் வீடியோ ஆதாரத்துடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உட்பட 29 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 145(கலைந்து செல்ல உத்தரவிட்டும் சட்டவிரோதமாக கூட்டத்தில் இருத்தல்), 290(பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்தல்), 41 (6) தமிழ்நாடு சிட்டி போலீஸ் சட்டம்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: