மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்: கோவை மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளும் ஐக்கியம்

சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இருந்து விலகி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. கட்சி பல அணிகளாக பிரிந்து இருக்கின்றன. அதே வேளையில் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளாக பிரிந்து தங்கள் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டு வந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை மிகவும் கடுமையாக விமர்ச்சித்து வந்தார். ஓபிஎஸ் அணியின் பேசும் நபர்களில் முக்கியமாக திகழ்ந்த கோவை செல்வராஜுக்கு கோவை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் தனது முன்னிலையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளை ஓபிஎஸ் அணியில் இணைத்தார். இந்நிலையில் ஓபிஎஸ் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து, ஓபிஎஸ் அணி சார்பில் நடக்கும் எந்த ஒரு கூட்டத்திலும் கோவை செல்வராஜ் பங்கேற்காமல் இருந்து வந்தார். இதனால் அவர் ஓபிஎஸ்சுடனான கருத்து வேறுபாடு உறுதியாகிவிட்டதாகவும், ஓபிஎஸ் அணியிலிருந்து அவர் விரைவில் விலகிவிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ‘ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி இருவருமே தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அதிமுக என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோருக்கிடையே நான் இருக்க விரும்பவில்லை. சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற என் மனசாட்சியும் இடம் தரவில்லை’ என்று கூறி ஒட்டு மொத்த அதிமுகவையும் அதிர வைத்து, கட்சியில் இருந்து விலகினார். திராவிட கட்சிகளில் தான் இணைவேன் என்றும் கூறினார். இதனால் அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அதிமுகவில் செய்தி தொடர்பாளராகவும், கோவை மாவட்ட செயலாளராக இருந்த கோவை செல்வராஜ்  அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், தனது ஆதரவாளர்களுடன் நேற்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் வந்தார். அவர் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன், அதிமுகவை சேர்ந்த கோவை மாநகர் மாவட்டப் பொருளாளர் கே.ரங்கராஜ், கோவை மாவட்ட ஓட்டுநர் அணி மாவட்டச் செயலாளர் கோவை பாரதி,  துணைச் செயலாளர் டெம்போ பாலு,  பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியின் போது, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, தலைமை நிலைய அலுவலகச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், கு.க.செல்வம் உட்பட பலர் கலந்து ெகாண்டனர்.

Related Stories: