×

சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், பள்ளி மாணவிகளை நேரில் அழைத்து காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பள்ளி மாணவிகளை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து பணிகள் அதிகரித்தல், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அதிகளவில் கண்காணித்தல், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள் மற்றும் ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து
அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக பின் வரும் சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் நபரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

1.கொடுங்கையூர் பகுதியில் காரில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்திகளுடன் சென்ற 2 போக்கிரி குற்றவாளிகள் கைது- 1 கைத்துப்பாக்கி, 12 தோட்டாக்கள், 34 நாட்டு வெடிகுண்டுகள், 35 பட்டா கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னையில் போக்கிரி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும், தலைமறைவு போக்கிரி குற்றவாளிகளை கைது செய்யவும், 2 உதவி ஆணையாளர்கள் தலைமையில், தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு குழு (Serious Crime Squad) தொடங்கப்பட்டு, தலைமறைவு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு (வடக்கு) உதவி ஆணையாளர்இராயப்பன் யேசுநேசன் தலைமையில், இப்பிரிவின் மேற்கு காவல் ஆய்வாளர்  பார்த்திபன், உதவி ஆய்வாளர். P-6 கொடுங்கையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கல்விஅரசன், தலைமைக் காவலர்கள் கோபாலகிருஷ்ணன் (த.கா.20229), சசிகுமார் (த.கா.20276), மலைவேல் (த.கா.24325), கண்ணன் (த.கா.26668), முதல்நிலைக் காவலர்கள் கார்த்திக் (மு.நி.கா.32695), வீரமணி (மு.நி.கா.30554), சிவராமன் (மு.நி.கா.45382), காவலர்கள் வினோத்குமார் (கா.41455), கதிரவன் (கா.49114) மற்றும் ஜெகன் (கா.52619) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 03.12.2022 அன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில்   கொடுங்கையூர்         T.H ரோடு மற்றும் R.R. நகர் சந்திப்பில் காரில் வந்த பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் மற்றும் அப்பு (எ) விக்ரமாதித்தன் ஆகிய 2 போக்கிரி குற்றவாளிகளை துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்கள் காரில் வைத்திருந்த 1 கைத்துப்பாக்கி, 12  தோட்டாக்கள், 34 நாட்டு வெடிகுண்டுகள், 35 பட்டா கத்திகள் மற்றும்  நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் 4 கிலோ சிக்கி முக்கி கற்கள், 750 கிராம்,  இரும்பு ஆணிகள், 2 கட்டு மூங்கில் குச்சிகள் மற்றும் 750 கிராம் நூல்கண்டு மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மேற்படி கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் என்பவர் P-6   கொடுங்கையூர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் வெடிகுண்டு வழக்குகள் உட்பட 9  குற்ற வழக்குகள்  மற்றும் அப்பு (எ) விக்கிரமாதித்தன் மீது மாதவரம் காவல் நிலையத்தில் 1 ஆள்கடத்தல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

2. சைபர் கிரைம் வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 48 நாட்களில் குற்றவாளிக்கு நீதிமன்ற தண்டனை வழங்கப்பட்டது. சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பியது தொடர்பாக, சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் 12.10.2022 அன்று வழக்குப் பதிவு செய்து, எதிரி அரவிந்த் வ/39, த/பெ.நாகராஜன், 20வது தெரு, 4வது செக்டார், கே.கே.நகர், சென்னை என்பவரை அன்றைய தினம் (12.10.2022) கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் வினோத்குமார், உதவி ஆய்வாளர் மேன்லி லாமேக் மற்றும் முதல்நிலைக் காவலர் விஜயகண்ணன் (மு.நி.கா.32847) ஆகியோர் துரிதமாக பணிகள் மேற்கொண்டு, 28.10.2022 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், சாட்சியங்களை ஆஜர்படுத்தியும் வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து 29.11.2022 அன்று குற்றவாளி அரவிந்த் என்பவருக்கு 17 நாட்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,500/- அபராதம் விதித்து, கனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் தீவிர பணியால், 48 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
3. H-6 ஆர்.கே நகர் பகுதியில் கூட்டுக்கொள்ளை சம்பவம் புரிவதற்காக இரவில் கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை மடக்கி பிடித்த காவல்குழுவினர். H-6 ஆர்.கே நகர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் எழில்மாறன் (மு.நி.கா.46936) மற்றும் ஊர்காவல் படை வீரர் விக்னேஷ் (HG 5334) ஆகிய இருவரும், கடந்த 29.11.2022 அன்று இரவு ரோந்து பணியின்போது, ஆர்.கே நகர், மீனாம்பாள் நகர், மேம்பாலத்தில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 நபர்களை நிறுத்த முற்பட்ட போது, ஒருவர் தப்பியோடவே மற்றொருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மேற்படி நபர்கள் கூட்டுக்கொள்ளை சம்பவம் புரிவதற்காக இரவில் கத்தியுடன் சென்றது தெரியவந்தது. அதன்பேரில் பிடிபட்ட ஜான்சன் (எ) கருப்பு, வ/24, த/பெ.தாஸ், “B” பிளாக், 1வது தெரு, எழில் நகர், கொடுங்கையூர், சென்னை என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.

4. அகில இந்திய அளவில் விரல்ரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 2 ஆம் இடம் மற்றும் 5 ஆம் இடம் பிடித்த சென்னை பெருநகர காவல், விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) 08.11.2022 முதல் 13.11.2022 வரை தில்லியில் நடத்திய அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் (All India Finger Print Board Exam), தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 233 நபர்கள் கலந்து கொண்டனர். இத்தேர்வில், தமிழகத்திலுள்ள 174 உதவி ஆய்வாளர்கள் உட்பட இதர மாநிலங்களில் இருந்து என மொத்தம் 233 உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். எழுத்து, செய்முறை மற்றும் நேர்க்காணல் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட இத்தேர்வில், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும், புனித தோமையர்மலை விரல் ரேகை பிரிவு (யூனிட்-2) உதவி ஆய்வாளர் திரு.மா.கார்த்திக் அழகன் என்பவர் 214 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும், சென்னை விரல் ரேகை பிரிவு (யூனிட்-1) உதவி ஆய்வாளர் திரு.மேசியா அருள்ராஜ் என்பவர் 206 மதிப்பெண்கள் பெற்று 5ம் இடமும்,  பிடித்து சென்னை பெருநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

5. ஆர்.கே.நகர் பகுதியில் தெருவில் கிடந்த ரூ.7,705/- அடங்கிய  மணி பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 5ம் வகுப்பு மாணவிகளுக்கு பாராட்டு. சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கே.ராதிகா, ஆர்.நிஷா, எஸ்.ஏஞ்சல், வி.காவியா ஆகியோர் ஆர்.கே.நகர் பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். மேற்படி 4 மாணவிகளும் கடந்த 28.11.2022 அன்று மதியம் பள்ளி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, இராமசாமி தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்றபோது, தெருவின் ஓரத்தில் ஒரு மணி பர்ஸ் இருந்ததை பார்த்து அதனையெடுத்து திறந்து பார்த்தபோது, அதில் பணம் இருந்தது தெரியவரவே,       4 மாணவிகளும் அருகில் உள்ள நபர்களிடம் விசாரித்து, பின்னர் இந்த மணிபர்சை H-6 ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் மணிபர்சை சோதனை செய்தபோது, அதில் ரூ.7,705/- இருந்ததை கண்டு, நேர்மையாக பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 4 மாணவிகளையும் பாராட்டினார்.
   
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மற்றும் விரைவாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க தீவிரமாக பணி செய்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், தேசிய அளவிலான தேர்வில் 2 மற்றும் 5ம் இடங்கள் பிடித்த விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தெருவில் கிடந்த பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த 5ம் வகுப்பு பயிலும் 4 மாணவிகள் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று (30.11.2022) நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Tags : Police Commissioner , Commissioner of Police commended police officers, policemen and schoolgirls for their excellent work and arresting the criminals
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...