×

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான தொடர் நடவடிக்கைகள்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 119 தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக கடந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு மேலாக அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின்படியும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களின் சீரிய  வழிகாட்டுதலின்படியும், சென்னை மாநகராட்சி மேயர் அவர்களின் மேலான நடவடிக்கைகளின்படியும், சென்னை மாநகராட்சியின் சார்பில் மாநகராட்சிப் பள்ளிகளின் கட்டமைப்பை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டம், நிர்பயா திட்டம், CITIIS திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் கூடுதல் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் அமைத்தல், மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளுதல்,  மாதிரி மற்றும் சீர்மிகு பள்ளிகளாக மாற்றுதல், மாணவ மாணவியருக்கான நவீன இருக்கைகள் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னைப் பள்ளிகளின் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்தல்,  மாணவ, மாணவியரின் ஆங்கிலப் புலமையை அதிகப்படுத்துதல், அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வாரமும் பாடவாரியாக வாராந்திர தேர்வு நடத்தி கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்துதல், கற்றல் அடைவுத் திறன் குறைவாக உள்ள மாணவர்களை பாடப்பிரிவுகளின் அடிப்படையில் கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துதல், ஆசிரியர்கள் அன்றன்று நடத்தும் பாடங்களை மாணவர்கள் ஆர்வமுடன் கற்கும் வகையில் நாள்தோறும் வீட்டுப்பாடம் வழங்கி கண்காணித்தல் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் அரசின் வழிகாட்டுதல்படி முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் அவர்களால் ஒவ்வொரு வாரமும் கல்வி மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் குறித்து கல்வி அலுவலர்கள் மற்றும் பாடவாரியாக ஆசிரியர்களுடன் ஆய்வு  மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், சென்னைப் பள்ளிகளில் அந்தந்தப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் திறனுக்கேற்றவாறு பாடவாரியாக வாராந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களின் கற்றல் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது. கற்றலில் அடைவுத்திறன் குறைவான மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் எந்தெந்த பாடப்பிரிவுகளில் உள்ளனர் எனக் கண்டறிந்து, அவர்களுக்கு கற்றலில் அடைவுத்திறன் அடையும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு ஆசிரியரும் அன்றன்று நடத்தும் பாடங்களை மாணவர்கள் மனதில் நன்றாகப் பதியச் செய்யும் வகையில் நாள்தோறும் வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டு, மறுநாள் ஆசிரியர்களால் திருத்தம் செய்யப்பட்டு,  வீட்டுப்பாடத்தில் மாணவர்கள் செய்த தவறுகள் சுட்டிக்காட்டி அவர்களின் கற்கும் திறன் மேம்படுத்திடும் வகையில் மாணவர்களுக்கு வழிகாட்டப்படுகிறது.

Tags : Chennai Municipal Schools , Continuous measures for increasing the pass percentage of students and improving education in Chennai Corporation Schools
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளை...