×

தமிழக-கர்நாடக எல்லையில் துப்பாக்கி சூடு; ஒருவர் கைது

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் காவல் உட்கோட்டம் கொளத்தூர் காவல் நிலைய எல்லையில் உள்ளது ஈரோடு மாவட்டம் பருகூர் வனப்பகுதி. இங்குள்ள சொரக்காமடுவு என்ற இடத்தில் துப்பாக்கியுடன் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட வனக்காப்பாளர் சுதாகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் 7 பேர் அப்பகுதிக்கு சென்றனர்.

அங்கு கோவிந்தப்பாடியை சேர்ந்த ராஜா (எ) காரவடையான், காமராஜ், குமார், செட்டிபட்டியைச் சேர்ந்த பச்சைக் கண்ணன், தர்மபுரி மாவட்டம் ஆத்துமேட்டூர் ரவி ஆகியோர் இரண்டு துப்பாக்கிகளுடன் மான்களை வேட்டையாடிக் கொண்டிருந்தனர். இவர்களை கண்டதும் வனத்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். வனத்துறையினரை கண்டதும் வேட்டைக்காரர்கள் தப்பி ஓடினர்.

அப்போது கோவிந்தபாடியை சேர்ந்த குமார் என்பவரை வனத் துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். பிடிபட்ட குமாரை ஈரோடு மாவட்டம் கொமராயனூரில் உள்ள சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் கர்நாடக வனப்பகுதியில் உள்ள மத்தியமரத்தூர் என்ற இடத்தில் வன விலங்குகளை வேட்டையாடி உள்ளதும் தெரியவந்துள்ளது. இரண்டு மாநில எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தி வேட்டைக்காரர் ஒருவரை வனத்துறையினர் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tamil Nadu ,Karnataka , Firing on Tamil Nadu-Karnataka border; One arrested
× RELATED பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை...