×

2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலையார் கோயிலில் இன்று இரவு தெப்ப உற்சவம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து இன்றிரவு 3 நாள் தெப்பல் உற்சவம் தொடங்குகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை, இரவு என பஞ்சமூர்த்திகள் வலம் வந்தனர். இதன் நிறைவு நாளான நேற்று அதிகாலை கோயிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. தீப ஒளியால் திருவண்ணாமலை நகரமே பிரகாசித்தது.

இன்று கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் காலை 8.14 மணிக்கு தொடங்கியது. நாளை காலை 9.22 மணிக்கு நிறைவடைகிறது. மகா தீபத்தை தொடர்ந்து இன்று 2வது நாளாக கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர். தீபவிழா நிறைவை தொடர்ந்து நேற்றிரவு 10.30 மணியளவில் கொடியிறக்கம் நடந்தது. இரவு 11 மணியளவில் மாடவீதியில் பஞ்சமூர்த்திகள் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

தீப விழா நிறைவை தொடர்ந்து ஐயங்குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் இன்றிரவு தொடங்குகிறது. முதல் நாளான இன்றிரவு சந்திரசேகரர் உலா வருகிறார். நாளை பராசக்தியம்மன், 3ம் நாளான நிறைவு நாளில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தெப்பலில் உலா வருகின்றனர். வரும் 10ம் தேதி சண்டிகேஸ்வரர் வீதியுலா நடக்கிறது. அத்துடன் தீபவிழா நிறைவடைகிறது.

நாளை காலை அண்ணாமலையார் கிரிவலம் வர உள்ளார். நேற்று மாலை ஏற்றப்பட்ட மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி தரும். வரும் 16ம் தேதி வரை மகா தீபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். வரும் 16ம்தேதி வரை பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



Tags : Utsavam ,Annamalaiyar Temple ,Mahadeepam , Theppa Utsavam tonight at the Annamalaiyar Temple with the Mahadeepam lit on the 2,668 feet high hilltop.
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...