×

பூந்தமல்லி நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி ஆணையரை மாற்ற கோரி தீர்மானம்

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று நகர்மன்றக் கூட்டத்தில் நகராட்சி ஆணையரை மாற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால் உள்ளூர் மக்களுடன் ஏராளமான வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு திமுக அரசு பல்வேறு திட்டங்கள் தீட்டி, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே பூந்தமல்லி நகராட்சியில் சுகாதார ஆய்வாளர், நகரமைப்பு அலுவலர், நகரமைப்பு ஆய்வாளர், நகரமைப்பு சர்வேயர் உள்பட 8 அதிகாரிகள் பணியிடங்கள் நீண்ட காலமாகவே காலியாக உள்ளன. இதனால், இங்கு புதிய வீடு கட்ட அனுமதி கேட்டு 100க்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. மேலும், நகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணி நடைபெறவில்லை. பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தால், ஆட்கள் பற்றாக்குறை உள்ளது என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். கடந்த மழைக்காலத்தின்போது, அந்தந்த பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீரை நகர்மன்ற உறுப்பினர்கள், தங்களின் சொந்த செலவில் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நகர்மன்றத் தலைவர் காஞ்சனா தலைமையில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் நாராயணன் உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், நகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள், திட்டங்கள் குறித்து ஒவ்வொரு தீர்மானமாக வாசிக்கப்பட்டது.

பின்னர், 20வது வார்டு உறுப்பினர் சவுந்தர்ராஜன் எழுந்து, நகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் வருவாய்ப் பிரிவில் உள்ள அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும். மக்களின் கோரிக்கைகள், தேவைகளை நிறைவேற்ற எந்த ஒத்துழைப்பும் தராமல் அதிகாரிகள் அலட்சியமாக பேசுகின்றனர். கடந்த மழையின்போது தேங்கிய மழைநீரை அகற்றுவதற்குகூட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இந்த அதிகாரிகளை உடனடியாக மாற்றுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார். நகர்மன்ற உறுப்பினர்களும் மேஜையை தட்டி, இத்தீர்மானத்தை ஒருமனதாக வரவேற்று, தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, நகர்மன்றத் தலைவரிடம் மனு அளித்தனர். மேலும், நகராட்சி ஆணையரிடம் சரமாரி கேள்விகள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு நகராட்சி ஆணையர் நாராயணன் பதிலளிக்கையில், பூந்தமல்லி நகராட்சியில் போதிய அதிகாரிகள், பணியாளர்கள் இல்லை. விரைவில் பணியிடங்களை நிரப்ப உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். ஒரு வார காலம் அவகாசம் கொடுங்கள். உறுப்பினர்கள் குறிப்பிட்ட பணிகளை அதிகாரிகளுடன் கலந்து பேசி முடித்து தர உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையரை மாற்றக் கோரிய தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Poontamalli ,Municipal Council ,Municipal Commissioner , Poontamalli Municipal Council meeting passed a resolution demanding the transfer of Municipal Commissioner
× RELATED சீர்காழி நகராட்சி பகுதியில் தடை...