பெரம்பலூர் அருகே பரபரப்பு; 5 கோயில்களில் கொள்ளை: உண்டியலை அலெக்காக தூக்கி சென்றனர்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே  அடுத்தடுத்து 5 கோயில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் ஊராட்சி திருப்பெயரில் சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை தூக்கி சென்று அருகே உள்ள வயலில் வைத்து உடைத்து காணிக்கை பணத்தை திருடிசென்றுவிட்டனர்.

நாவலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் உண்டியல் மற்றும் அருகே உள்ள 2 மாரியம்மன் கோயில்களில் இருந்த உண்டியல், மேலப்புலியூர் செல்லும் சாலையில் உள்ள முருகன் கோயிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீசார் நாவலூர், திருப்பெயர் பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். அதில், திருப்பெயர் கோயில் உண்டியலில் ரூ.25 ஆயிரம், நாவலூர் கிராமத்தில் 4 கோயில்களிலும் ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுசம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: