×

மதுரை மாவட்டத்தில் ‘உயர் அடர் நடவு’ முறையில் மா, கொய்யா சாகுபடியில் மகசூல் அள்ளும் விவசாயிகள்

*ஏக்கருக்கு 12 டன் வரை விளைச்சல்

*இலவச பயிற்சி தரும் வேளாண் நிலையம்

மதுரை : மதுரை மாவட்டத்தில் உயர் அடர் நடவுமுறை மூலம் மா, கொய்யா சாகுபடியில் விவசாயிகள் மகசூலை அள்ளி வருகின்றனர். இவர்களுக்க வேளாண் நிலைய அதிகாரிகள் இலவசமாக பயிற்சி அளிப்பதுடன், வழிகாட்டியும் வருகின்றனர்.மதுரை மாவட்டத்தில் உயர் அடர் நடவு முறையில் விவசாயிகள் மா மற்றும் கொய்யா சாகுபடி செய்து வருகின்றனர். உயர் அடர் நடவுமுறை என்பது ஒரு ஏக்கரில் 10 மடங்கு மரங்களை நடுவதாகும். இதன் மூலம் உற்பத்திதிறன் 3 மடங்கு அதிகரிக்கிறது. பொதுவாக வழக்கமான நடவு மூலம் 7 முதல் 8 வருடங்களில் பலன் காணலாம்.

ஆனால், இம்முறையில் 3 வருடங்களாக குறைக்கலாம். மற்ற வணிக பயிர்களைப் போல் மா மற்றும் கொய்யா பழப்பயிர்களை லாபகரமாக பயிர் செய்ய முடியும். சொட்டுநீர் பாசனம் வழியாக உரமிடுவதால் உரப் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பத்தோடு மட்டுமில்லமால் பரிந்துரை செய்த உர அளவில் சுமார் 30 விழுக்காடு உரத்தை சேமிக்க முடியும்.

பயிர்களில் வேர்ப்பகுதிக்கு மட்டும் பாசன நீர் அளிப்பதால் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மா மற்றும் கொய்யாவில் உயர் அடர் நடவுமுறையில் ஆரம்பகாலங்களில் சுமார் 3 வருடம் ஊடுபயிர் செய்தும் வருவாய் ஈட்டலாம்.மா அடர் தொழில் நுட்பம்: சாதாரண நடவு முறையில் ஏக்கருக்கு 40 மரங்கள் நடலாம். மகசூல் காலம் 7 முதல் 9 வருடங்களில் பெறலாம். முழு உற்பத்தி திறன் கிடைக்க 12 முதல் 15 வருடங்கள் ஆகும். மித அடர்வு நடவுமுறையில் பயிர் அடர்த்தி 170 முதல் 200 மரங்கள், மகசூல் காலம் 4 முதல் 5 வருடங்கள்.

முழு உற்பத்தி திறன் 7 முதல் 8 ஆண்டுகளில் கிடைக்கும். இதன் உச்சமாக, உயர் அடர்வு நடவுமுறையில் பயிர் அடர்த்தி ஒரு ஏக்கருக்கு 680 மரங்கள், 3 முதல் 4 வருடங்களில் மகசூல் கொடுக்கும். இத்தகைய முறையில் முழு உற்பத்தி திறன் கிடைக்கும். உற்பத்தி மற்றும் மேலாண்மை செய்வதற்கு இலகுவானதாக இருக்கும்.

நீர் பாசனத்தை சொட்டு நீர்ப் பாசன முறையில் கொடுக்கும்போது 3 வயதுள்ள மரங்களுக்கு 9 முதல் 12 லிட்டர் நீர் ஒரு நாளைக்கு அளிக்க வேண்டும். மேலும், 12 வயதுக்கு மேலுள்ள மரங்களுக்கு 120 லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு பாய்ச்ச வேண்டும். உர மேலாண்மையில் முதல் 10 வருடங்கள் வரை, தொழு உரம் 10 கிலோ, தழைச்சத்து 0.20 கிராம், மணிச்சத்து 0.20 கிராம் மற்றும் சாம்பல் சத்து 0.30 கிராம் இட வேண்டும். ஆறு வருடங்களுக்கு மேலுள்ள மரங்களுக்கு 50 கிலோ தொழு உரம், தழைச்சத்து 1 கிலோ, மணிச்சத்து 1 கிலோ மற்றும் சாம்பல் சத்து 1.5 கிலோ இட வேண்டும். தரை மட்டத்திலிருந்து 100 செமீ வரை எந்த கிளைகளையும் வளர விடக்கூடாது.

பழ அறுவடை முடியும் ஒவ்வொரு வருடத்திலும் உடனே கவாத்து செய்து தேவையான உரங்களை அளித்து நீப்பாசனம் செய்வது அவசியம். உயர் அடர் நடவுமுறையில் ‘மா’ சாகுபடி செய்தால் மரங்கள் விரைவாக விளைச்சலுக்கு தயார் ஆவதோடு, ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் கிடைக்கிறது. அதனால், தற்போது அடர் நடவுமுறையை வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து வருகின்றனர்.

இது குறித்து மதுரை வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை வல்லுநர் அருள் அரசு, திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 7 ஆயிரம் ெஹக்டரில் அழகர்கோவில், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் செந்தூரா, கல்லாமை, நீலம், அல்போன்சா, இமாம்சந்த், பங்கனப்பள்ளி, ரிமோரியா, மல்கோவா மற்றும் உள்ளூர் மா ரகங்களை பயிரிடுகின்றனர்.

சாதாரண நடவு முறையைக் காட்டிலும் அதிக மகசூல் கிடைப்பதால் விவசாயிகள், மா விவசாயத்தில் ‘அடர் நடவு’ முறையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சாதாரண முறையில் 10க்கு 10 மீட்டர் இடைவெளியில் மா சாகுபடி செய்கின்றனர். இதில் ஏக்கருக்கு 40 மாங்கன்றுகளை மட்டுமே நடவு செய்ய முடியும். மகசூலும் உயர் அடர்நடவு முறையைவிட குறைவாக கிடைக்கிறது.
உயர் அடர்நடவு முறையில் மாங்கன்றுகளை 3க்கு 2 மீட்டர் இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 680 மாங்கன்றுகளை நடலாம்.

பழைய முறையில் ஏக்கருக்கு 5 டன் மட்டுமே மகசூல் கிடைக்கிறது. அடர் நடவு முறையில் 10 முதல் 12 டன் மகசூல் கிடைக்கிறது. ஒவ்வொரு மரத்தை ஒப்பிடும்போதும், பழைய முறையில் ஒரு மரத்தில் 100 கிலோ மகசூல் கிடைக்கும். ஆனால், அடர் நடவுமுறையில் ஒரு மரத்திற்கு 30 கிலோ வரை மட்டுமே மகசூல் கிடைக்லாம். ஆனால், மொத்த மகசூலை ஒப்பிடும்போது பழைய முறையைக் காட்டிலும் இரட்டிப்பு மகசூலை அடர் நடவுமுறை வழங்குகிறது. தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் மா விளைச்சல் அதிகம். அதேபோல மதுரையிலும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யாவிலும் இந்த அடர் நடவுமுறை அமல்படுத்தப்பட்டு, இரு மடங்கு சாகுபடி பார்க்கப்படுகிறது. பழங்களின் உற்பத்தி செலவினமும் கனிசமான அளவு குறைகிறது. உயர் அடர் நடவுமுறைகள் பற்றி மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சிகளாகவும், கள பயிற்சிகளாகவும் விவசாயிகள் பயனடையும் வகையில் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 93449-36897ல் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Madurai , Madurai: In Madurai district, farmers are reaping the yield in mango and guava cultivation through high density planting system. Agriculture station for them
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...