ஜெயந்திநகர் காலனி பகுதியில் தேங்கிய நீரால் கொசு உற்பத்தி அதிகரிப்பால் நோய் பரவும் அபாயம்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்

க.பரமத்தி : பவித்திரம் ஊராட்சி ஜெயந்திநகர் காலனி பகுதியில் தேங்கிய நீரால் கொசு உற்பத்தி அதிகரிப்பால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சி ஜெயந்திநகர் காலனியில் 70மேற்பட்ட வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளியவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் பெரும்பாலும், நடுத்தரவாசிகள் மற்றும் தொழிலாளர்கள் தான் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான பகுதிகள் சாக்கடை நீர் தேக்கம், போதிய வடிகால் வசதி இல்லாதது, தெருவிளக்கு வசதிகள் குறைவு போன்ற அடிப்படை பிரச்னைகள் அதிகளவு உள்ளன. மேலும், தாழ்வான பகுதிகளும் இப்பகுதியில் அதிகளவு உள்ளன.

இதனால், மழைக்காலங்களில் அருகே உள்ள வடிகால்களிலும், குட்டைகளிலும் நீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருவதோடு, டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, நிமோனியா, யானைக்கால் நோய் போன்ற நோய்களை பரப்பும் காரணியான கொசுக்களின் உற்பத்தியும் இப்பகுதிகளில் அதிகளவு உள்ளது.வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பும் தொழிலாளர்களை இரவில் சிரமப்பட்டு சாப்பிட்டு விட்டு தூங்கும் இவர்களை விடிய, விடிய அசுர வேகத்தில் வளர்ந்துள்ள கொசுக்கள் பாடாய்படுத்தி வருகிறது. இந்த கொசுக்களின் கடியால் இப்பகுதியினர் தற்போது பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

சீசன் மாற்றத்தினால் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுவதாக பரவலாக கூறப்பட்டாலும், தீவிர கொசுக்கடியும் இந்த நோய்களுக்கு ஒரு காரணமாக உள்ளது.எனவே, ஜெயந்திநகர்காலனி பகுதிகளில் கட்டுங்கடங்காமல் வளர்ந்துள்ள கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த ஒரு மாதத்தில் பெய்த பருவமழை காரணமாக ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்று கொசுக்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்து வருகிறது. எனவே சுகாதாத்துறையினர் மெத்தபோக்கை தவிர்த்து உடனே கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் புகை மருந்து அடிக்க தேவையான அனைத்து நடவடிக்கையை உடனடியாக மேற் கொள்ள வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களாலும் பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: