வேலூர் மாவட்டத்தில் அதிகாலை கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி-முகப்பு விளக்குகள் எரியவிட்டபடி பயணம்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். சாலை தெரியாத வகையில் இருந்ததால் முகப்பு விளக்குகள் எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன.தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டியது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் ஓரிரு நாட்கள் மட்டும் மிதமான மழை பெய்தது. பெரிய அளவில் கனமழை பெய்யவில்லை. வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்த்து இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு அதிகரித்து வந்தது.

குறிப்பாக வேலூரில் கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது. நேற்று அதிகாலை முதல் காலை 9 மணிக்கும் மேலாக நீண்ட நேரமாக நிலவும் பனி மூட்டதால் எதிரே வருபவர்கள்கூட தெரியாத சூழ்நிலை நிலவியது. மேலும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், சாலையே தெரியாத அளவுக்கு கடுமையான பனி மூட்டம் சூழ்ந்தது.

இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர்.இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, அணைக்கட்டு, லத்தேரி போன்ற பல்வேறு பகுதிகளில் பணி மூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் விடிந்தும் கூட முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. காலை, மாலை வேளைகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர். வேலைக்கு செல்பவர்கள், நடைபயிற்சிக்கு செல்பவர் என அனைத்து தரப்பு மக்களும் அவதிக்கு ஆளாகினர்.

Related Stories: