×

திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு மாற்றாக எண்ணெய் பனை சாகுபடி செய்யலாம்-விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு மாற்றாக எண்ணெய் பனை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மன்னார்குடி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழகத்தில் பாமாயில் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைப்பதை உறுதிபடுத்தும் வகையில் எண்ணெய் பனை சாகுபடியை உயர்த்துவதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திட்டம் வகுக்கப்பட்டு அதற்கு மாநில அளவில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் பனை சாகுபடிக்கு ஏற்ற மண் வகையும், தட்பவெட்ப நிலையும் உள்ளது. மேலும், சாகுபடி செய்த எண்ணெய் பனையை அரைக்க தேவையான அரவை மில் வசதி அருகாமையில் உள்ளது.  இதன் காரணமாக, தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டமான தேசிய எண்ணெய் பனை இயக்கம் 2022-23 திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் அணைத்து ஒன்றியங்களில் புதிய எண்ணெய் பனை பரப்பு விரிவாக்கத்திற்கு 25 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்காக ரூ.5 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து, மன்னார்குடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் கூறுகையில்,  எண்ணெய் பனையானது மற்ற தோட்டக்கலை பயிர்களை ஒப்பிடும்போது அதிக மகசூல் தரக்கூடிய ஒரு தோட்டக் கலை பயிராகும்.  எண்ணெய் பனை சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மானியம் பெற தேவையான ஆவணங்களான பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவை அலுவலகத்தில் சமர்ப்பித்து மானியம் பெற்று பயன்பெறலாம்.

மேலும் தொடர்புக்கு, மன்னார்குடி வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் பாலசுப்பிரமணியன் 9486032129, நீடாமங்கலம் வட்டார துணைத் தோட்டக்கலை அலுவலர் பெரியசாமி 9976476328, கோட்டூர் வட்டார தோட்டக்கலை அலுவலர் முத்துசுந்தரம் 6381651039, முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி மதுமிதா 9698883076 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்றார்.



Tags : Tiruvarur district , Mannargudi: Mannargudi district has asked farmers to cultivate oil palm as an alternative to paddy in Tiruvarur district.
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி