காணாமல் போனால் விரைவில் கண்டுபிடிக்க தீபவிழாவுக்கு சென்ற குழந்தைகளின் கைகளில் ‘டேக்’ கட்டிய போலீசார்-பெற்றோரின் செல்போன் எண், பெயர் எழுதினர்

வேலூர் : திருவண்ணாமலை தீப விழாவை காண பெற்றோருடன் சென்ற குழந்தைகளின் கைகளில் அவர்களது பெயர், பெற்றோரின் செல்போன் எண்ணுடன் ‘டேக்’ கட்டி போலீசார் அனுப்பி வைத்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி நேற்று மாலை திருவண்ணாமலை மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக தீபத்திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. மேலும் சுவாமி வீதியுலா, கோயில் பிரகாரத்தில் மட்டுமே நடந்தது.

தேரோட்டமும் நடைபெறவில்லை. எனவே 2ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமான உற்சாகத்துடன் தீபத்திருவிழா நடைபெறவதால் மகா தீபத்தை தரசிக்க சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் சுமார் 2,700 சிறப்பு பஸ்கள், 14 சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. வேலூரில் இருந்து 100 பஸ்கள், ஆற்காட்டிலிருந்து 70 பஸ்கள், சோளிங்கரில் இருந்து 10 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 75 பஸ்கள், பெங்களூரில் இருந்து 10 பஸ்கள், திருப்பதியில் இருந்து 10 பஸ்கள் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்களாக நேற்று முன்தினம் இரவு முதல் இயக்கப்பட்டது.

இந்நிலையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை தீப விழாவை காண குழந்தைகளுடன் நேற்று காலை முதல் பஸ்களில் பக்தர்கள் பயணம் செய்தனர்.

அப்போது, போலீசார் குழந்தைகளின் பெயர், அவர்களின் பெற்றோரின் செல்போன் எண், மற்றும் ஊர் பெயரை எழுதி குழந்தைகளின் கைகளில் டேக் கட்டிவிட்டனர். தீப விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல் திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தீப விழாவுக்கு பெற்றோருடன் வந்த குழந்தைகளின் கைகளில் போலீசார் பெயர், பெற்றோரின் செல்போன் எண் போன்ற விவரங்களை எழுதிய டேக் கட்டிவிட்டனர். இதனால் தீப விழாவுக்கு பெற்றோருடன் வந்திருந்த அனைத்து குழந்தைகள் கைகளிலும் டேக் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: