×

புயல் எச்சரிக்கை காரணமாக பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை: 1,000 படகுகள் கரையில் நிறுத்திவைப்பு

திருவள்ளுர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. புயல் எச்சரிக்கையால் பழவேற்காட்டில் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்வளத்துறை அறிவுறுத்தலை தொடந்து 1,000-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு வங்கக்கடலை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும். இங்கு 300-க்கும் மேற்பட்ட மீனவ குப்பங்களில் வசிக்கும் மீனவர்கள் ஏரி மற்றும் வங்க கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வங்ககடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

இந்நிலையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாக்கி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மாண்டஸ் புயலாக வலுப்பெரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் புயல் மற்றும் பலத்த மழையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும்  உள்ளாட்சி நிறுவன அதிகாரிகள் மணல் மூட்டைகளை சேகரித்து வைத்து உள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல கூடாது என மீன்வளத்துறை அறிவித்து உள்ளது. பொன்னேரி மீன்வளத்துறை அதிகாரிகள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கக் செல்ல கூடாது என மீனவர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 1000 படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



Tags : Orchard , Storm Warning, Orchard Fisherman, Sea, Not Going, 1,000 Boat, Shore, Suspended
× RELATED திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...